| திணை: வெட்சி. துறை: உண்டாட்டு. ஒளவையார் பாடியது.
உரை: குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் - குயிலினது வாயலகுபோன்ற கூரிய மொட்டுக்களையுடைய புனலிக்கொடியினது; பயிலாது அல்கிய பல்காழ் மாலை - பயில மலராமல் தங்கிய பல காழாகிய பூவால் தொடுக்கப்பட்ட மாலையை; மையிரும் பித்தை பொலியச் சூட்டி - கரிய தலைமயிர் பொலிவு பெறச்சூடி; புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர் ஒன்று புதிய அகலிடத்தே கொள்ளப்பட்ட புலியின் கண்ணைப் போலும் நிறத்தையுடைய வெம்மையான நறவு ஒன்றையே; இருமுறை இருந்துண்ட பின்றை - இரண்டுமுறை இங்கே இருந்து உண்ட பின்பு; உவலைக் கண்ணி துடியன் வந்தென - பசிய தழை விரவித் தொடுத்த கண்ணியையுடைய துடிகொட்டுவோன் அதனைக் கொட்டி வெட்சிப் போர்க்கு எழுச்சியினைத் தெரிவித்தானாக; பிழிமகிழ் வல்சி வேண்ட - வடித்த கள்ளையேந்தி யுண்கவென வேண்டியும்; கள்ளின் வாழ்த்தி அது கொள்ளாய் - கள்ளினை வாழ்த்தி வேண்டாவென அது கொள்ளாய் வாளைக் கொண்டனை; என்ப - என்று சான்றோர் கூறா நிற்பர்; கரந்தை நீடிய அறிந்துமாறு செருவில் - கரந்தையார் நெடியராய் மறைந்திருத்தலை யறிய்து மாறிச்சென்று செய்யும் போரில்; பல்லான் இன நிரை தழீஇ - அவர்களுடைய பலவாகிய இனமான ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு; கொடுஞ்சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப- வளைந்த சிறகினையும் நிறத்தினையுமுடைய பருந்துகள் ஆரவாரிக்கும்படி; வில்லோர் தடிந்து மாறு பெயர்த்த இக்கருங்கை வாளே - கரந்தையாராகிய வில் மறவர்களைக் கொன்று மாறுபாட்டினைப் போக்கிய இப்பெரிய கை வாள்தானே அது; எ - று.
மற்று: வினைமாற்று. காழ் போறலின், அதிரற்பூ காழெனப் பட்டது. கொடி முழுதும் நிரம்பப் பூவாது ஆங்காங்கொன்றாகப் பூத்துக்கிடத்தலால் பயிலாது அல்கிய பூ என்றார். வெட்சிப் போர்க்குச் செல்வோர் அதிரற் பூவைச் சூடிக்கொள்வது மரபு.கொய்குழையதிரல் வைகுபுல ரலரி,சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி, இகல் முனைத் தழீஇ ஏறுடைப் பெருநிரை (அகம். 213) எனச் சான்றோர் கூறமாற்றால் அறிக. கள்ளினை வேண்டானாயினும், அதன்மேல் அவற்கு வெறுப்பில்லை யென்றதற்குக் கள்ளின் வாழ்த்தி யென்றார். நிரையைக் காப்பவர் கரந்தைப்பூ சூடுவராதலின்,அவரது நெடும்படையைக் கரந்தை என்றார்.வல்சி வேண்ட,இது கொள்ளாாய்க் கொண்டனை வாள் என்ப; பெயர்த்த இக்கைவாளே அது என முடிக்க. கரந்தைப் படையின் பன்மை விளங்க நீடிய என்றார். வாளே என்புழி ஏகாரம் வினா. இது வாளைப் புகழுமுகத்தால் தலைவனது வாளாண்மையை வியந்து பரவியது.
விளக்கம்:உண்டாட்டாவது, தொட்டிமிழுங் கழல் மறவர் மட்டுண்டு மகிழ் தூங்கின்று (பு.வெ.மா.வெட். 14) அதிரற் பூவைப் பயிலா தல்கிய பல்காழ் என்றது போலப் பிறரும் வைகுபுலர் அலரி என்பதுகுறிக்கத்தக்கது. |