| தெளிந்த நறவு புலியின் கண்போலுதம் நிறமும் ஒளியுமுடைய தென்றற்குப், புலிக்கண் வெப்பர் என்றார். துடியன், பாணன் பறையன் என வரும் குடிவகையுள் ஒரு குடியினன். போர் மறவர்க்கு அவர் தம் தலைவரிடும் பணியைத் துடி கொட்டித் தெரிவிப்பவன். வந்தென என்றது அவன் வந்து வெட்சிப் போர்க்கு எழுதல் வேண்டுமென்று தெரிவித்தானென்பதை யுணர்த்திற்று. பெயர்த்த என இறந்தகாலத்தாற் குறித்தது, நிகழ்ந்த வெட்சிப்போரை; அதன் முடிவில் இவ்வுண்டாட்டு நிகழ்வதுபற்றி, பெயர்த்து என்ற பாடத்துக்கு இறந்தகாலம் விரைவுக் குறிப்பிற்றென வுரைக்க.
270. கழாத்தலையார்
பகைவர், தம்மூர் நிரைகளைக் கவர்ந்தேகக் கண்ட ஊர்மறவர் கரந்தை சூடிச்சென்று அவரோடு கடும்போர் செய்து வென்று நிரைகளை மீட்டற்குச் சமைந்தனர். வெட்சியார் நிரை கவர்ந்த செய்தியறிந்த வேந்தன் தன்னூர் மறவரைத் தண்ணுமை முழக்கி யறிவித்தழைப்ப, அவர்கள் வென்றிபெறும் வேட்கையும் பலரும் காண மன்றத்தில் நின்று போருடற்றி மறப்புகழ் பெறும் வேட்கையும் உடையராயச் சென்று பொருதனர். அவருள் ஒரு மறவன் அப்போரில், கோடரியால் வெட்டுண்டு வீழ்ந்த மரம்போல் பகைவர் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தான். அதனைக் கண்டோர் பலர்; அவருள் கழாத்தலையாரும் ஒருவர். அவன் வீழ்ந்து கிடப்பதைச் சான்றோர் சூழ வேந்தன் சென்று கண்டு வியந்து பாராட்டிக் கண்ணீர் சொரிந்தான். புரந்தார்கண்ணீர் மல்கச் சாகிற்பின் சாக்கா, டிரந்துகோட்டக்க துடைத்து(குறள். 780) என்பவாகலின், கழாத்தலையார் அவன் பொருட்டு வேந்தன் முதலிய சான்றோர் வருந்திய வருத்தத்தை அவனைப் பெற்ற தாய்க் குரைப்பாராய் இப்பாட்டினைப் பாடியுள்ளார்.
| பன்மீ னிமைக்கு மாக விசும்பின் இரங்கு முரசி னினஞ்சால் யானை நிலந்தவ வுருட்டிய நேமி யோரும் சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே | 5 | நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் | | சிறுவர் தாயே பேரிற் பெண்டே நோகோ யானே நோக்குமதி நீயே மறப்படை நுலலு மரிக்குரற் றண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரு மறவர் | 10 | வென்றிதரு வேட்கையர் மன்றங் கொண்மார் | | பேரம ருழந்த வெருமரு பறந்தலை விழுநவி பாய்ந்த மரத்தின் வாண்மிசைக் கிடந்த வாண்மையோன் றிறத்தே. |
திணை: கரந்தை. துறை: கையறுநிலை. கழாத்தலையார் பாடியது. கண்டார் தாய்க்குச் சொல்லியது. |