| உரை: பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் - பலவாகிய விண்மீன்கள் திகழும் மாகமாகிய உயர்ந்த வானத்தின்கண் முழங்கும் முகில்போல; இரங்கும்முரசின் - முழங்கும் முரசினையும்; இனம் சால் யானை - இன மமைந்த யானையினையும்; நிலம் தவ உருட்டிய நேமியோரும் - நிலத்தின்கண ் நெடிது செலுத்திய ஆணையாகிய ஆழியினையுமுடைய வேந்தரும்;சமம் கண் கூடி வேட்ப-போர்க்களத்தின் கண் ஒன்றுகூடி அன்பால் வருந்தா நின்றார்; நறுவிரை துறந்த நாறா நரைத்தலை - நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறிய மணங் கமழாத நரைத்த தலையையுடைய; சிறுவர் தாயே - இளையோர்க்குத் தாயே; பேரில் பெண்டே - பெருங்குடிப் பெண்டே; நோகுயான் - நோவேன்யான்; நீயே நோக்குமதி - நீயே பார்ப்பாயாக; மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை - மறம்பொருந்திய வீரரைப் போர்க்கழைக்கும் அரித்த குரலையுடைய தண்ணுமையது; இன்னிசைகேட்ட துன்னரும் மறவர் - இனிய ஓசையைக்கேட்ட நெருங்குதற்கரிய மறவர்; வென்றிதரு வேட்கையர் - வென்றி பெறும் வேட்கையுடையராய்; மன்றம் கொண்மார் - மன்றத்தைக் கொள்ளும்பொருட்டு; பேரமர் உழந்த வெருமரு பறந்தலை - பெரிய போரைச்செய்த அச்சம் பொருந்திய பறந்தலையின் கண்; விழுநவி பாய்ந்த மரத்தின் - பெரிய கோடரியால் வெட்டப்பட்டு வீழ்ந்த மரம்போல; வாள்மிசைக் கிடந்த ஆண்மை யோன் திறத்து - வாளின்மேல் வீழ்ந்துகிடந்த ஆண்மையையுடைய மறவனாகிய நின் மகன் திறத்தில்; எ - று.
ஓவும் மதியும் அசைநிலை. தவ, மிக; ஈண்டு நெடிதெனக் காலத்தின் மேற்று. மன்றம், போர்க்களத்தின் நடுவிடம். தாயே, பெண்டே, யான் நோகு, நீயே நோக்கு; மறவர் வேட்கையராய் மன்றம் கொண்மார், உழந்த பறந்தலையில், வாண்மிசைக்கிடந்த ஆண்மையோன் திறத்து நேமியோரும் வேட்ப எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாண்மிசைக் கிடந்த ஆண்மையைத் தம் கண்ணீர் சொரிந்து வேட்பதுபற்றி வேட்ப என விதந்துரைக்கப்பட்டது.
விளக்கம்: கரந்ததையிற் கையறுநிலையாவது, வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு, கருவி மாக்கள் கையற வுரைத்தன்று (பு.வெ.மா. 2:10) எனவரும். கருவி மாக்களாவார் பாணர் விறலியர் முதலியோரரினும் இனம்பற்றிப் புலவரும் சான்றோரும் கொள்ளப்படும். மாக விசும்பின் நடுவுநின் றாங்கு (புறம். 35) என்றதற்குப் பழையவுரைகாரர் மாகமாகிய உயர்ந்த வானம் என்றது கடைப்பிடிக்க. விசும்பு, ஆகுபெயராய் மழைமுகில் மேனின்றது; விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள். 16) என்றாற்போல. முரசும்,யானையும் நேமியுடையோர் என இயையும். வேட்ப, பகரவீற்றுப் பல்லோர் படர்க்கை வினைமுற்று. பேரில் வேட்கையராய் மன்றங் கொள்ளற்குப் பேரமர் உழந்தும் நின் மகன் பெற்ற மறப் புகழைப் பெறாராயினார் என்பது தோன்ற, பேரம ருழந்த வெருவரு பறந்தலை யென மிகுத்தோதினார். வாளால் எறியுண்டு வீழ்ந்தானாயினும், மறங்குன்றா ஆண்மையால் |