| வேந்தரும் மறவரும் கையற்றுப் பாராட்டும் பெரு நலத்தை, யாம் கூறக் கேட்பதேயன்றி நீயும் கண்ணாற் காண்பாயாக என்றற்கு, சிறுவர் தாயே பேரில் பெண்டே, நோக்குமதி நீயே என்றார். வீழ்ந்த மறவனை யல்லது வேறுபற்றுக் கோடில்லாதவள் என்பது தோன்ற, நறுவிரை துறந்த நாறா நரைத்தலை யுடையவளே என்றார்.
--- 271. வெறிபாடிய காமக்காணியார்
சங்கச் சான்றோருள் காமக்கண்ணியென்றும் காமக்கணியென்றும் வழங்கப்படுவோர் உளர்; இப்பெயர் காமக்காணியென வரற்பாலது. இம்மையிற் புகழ் மக்கட்பேறு முதலிய பயன்களையும் மறுமையில் துறக்க வின்பதையும் கருதிச் செய்யும் வேள்வி காமியம் எனப்படும்; அது காமம் எனவும் வரும்; இவ்வேள்விகளை முடித்துத்தரும் வேதியர் கட்குத் தரப்பெறும் சிறப்பு, காமக்காணி யெனப்படும். இது பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்தும் நிகழ்ந்த தென்பது வேள்விக் குடிச் செப்பேட்டால் புலனாகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டில் (Journal of the Annamalai University, Vol. XV.) இது விரிவாக ஆராய்ந்து காட்டப்பெற்றுள்ளது. இத்தகைய காமக்காணிகள் இடைக் காலத்திலும் பலர் இருந்திருக்கின்றனர். இக்காமக்காணி யென்பது ஏடெழுதினோரால் காமக்கணி யென்றும் காமக்கண்ணி யென்றும் எழுதப்பட்டுவிட்டது. களவுக் காலத்தில் மகளிர் வரைவு நீட்டித்த விடத்து மேனி வேறுபாடெய்தி வருந்துவர். களவுண்மையறியாமல் பெற்றோர் அவ்வேறுபாடு முருகனால் உண்டாயிற்றெனக் கருதி வெறிபாட்டெடுத்து வழிபடுவர். அவ்வெறியாட்டை மிக விளக்கமாக எடுத்துப் பாடுவதில் இக்காமக்காணியார் தலைசிறந்தவர். இவர் வெறியாட்டினை விதந்து பாடும் பாட்டுக்களுட் சில அகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய, சான்றோர் ஒருகால் அரசர் இருவர் போருடற்றக் கண்டார். ஒருவர் மற்றவருடைய நகரத்து அரணை முற்றிக்கொண்டனர். அடைமதிற்பட்ட மற்றவருடைய மறவர் மதிலிடத்தே நின்று நொச்சிமாலை சூடி அதனைக் காக்குமாற்றால் பெரும்போர் புரிந்தனர். அப்போரில் ஒரு மறவன் அணிந்திருந்த நொச்சி மாலை, அவன் பகைவர் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தபோது, அறுப்புண்டு அவன் குருதியிற் படிந்து உருமாறிப் போயிற்று. போரிடைப்பட்டு வீழ்ந்த பிணங்களைத் தின்றற்குப் பருந்து முதலிய பறவைகள் அங்கே சூழ்ந்து கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு பருந்து குருதியிற்படிந்து உருமாறிய நொச்சிமாலையை ஊன் எனக் கருதித் தூக்கிக் கொண்டு உயரத்திற் பறந்துபோயிற்று. அதனைக் காமக்காணியார் கண்டார். அக்காட்சி அவர் புலமையுள்ளத்திற் படிந்து இந்த அழகிய பாட்டை வெளிப்படுத்திற்று.
| நீரற வறியா நிலமுதற் கலந்த கருங்குர னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை மெல்லிழை மகளி ரைதக லல்குற் றொடலை யாகவுங் கண்டன மினியே | 5 | வெருவரு குருதியொடு மயங்கி யுருவுகரந் |
|