பக்கம் எண் :

167

     

தானே பாங்கற்கு - தான் தோழன்பொருட்டு; ஆர்சூழ் குறட்டின் வேல்
நிறத்து இங்க - ஆர்க்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும்
குடம்போல வேல் மார்பிடைப் பாய்ந்தழுந்தித் தங்க; உயிர் புறப்படா
அளவை - உயிர் உடம்பின் நீங்கற் கூசலாடுமளவில்; தெறுவர வெகுட்சி
தோன்ற; தெற்றிப் பாவை திணிமணல் அயரும் - திண்ணைமேல் வைத்து
விளையாடும் பாவையைத் திணிந்த மணலின்கண் வைத்து விளையாட்டயரும்;
மென்றோள்மகளிர் நன்று புரப்ப - மெல்லிய தோளையுடைய பெண்கள்
மிகவும் பேணி வளர்க்க; இமிழ்ப்புற நீண்ட பாசிலைக் கமழ்பூந் தும்பை
விளக்கமிக நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப்
பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியை; நுதலசைத்தோன் - தன்
நெற்றியிலே கட்டினான்; எ - று.


     நீர்நாய் வாளையை இரையாகப்பெற்று, இரைபெறாமல் மாறுகொள்
முதலைகளோடு மயங்கி ஊழ் மாறு பெயரும் என இயைத்துரைக்க. வாளை
யுண்டதனோடமையாது மயங்கி முதலையொடு மாறுபடும் என்றது, முன்னே
பகைவரை வென்றதனோ டமையாது தம்மின் வலிமிக்க பகைவரோடு
மாறுபட்டு நீங்கும் மறவர் பண்புணர்த்தி நின்றது. அழும்பில்
வேளிர்க்குரியது; “மானவிறல்வேள் அழும்பில்” (மதுரை: 344-5) என
மாங்குடிமருதனார் குறிப்பது காண்க. கோசர், சொல்வன்மைமிக்க
ஒருவகை வீரர். மன்றுள் -போர்க்களத்தின் நடுவிடம். தெற்றியிடத்தே
வைத்தாடுதற்குரிய பாவையை மணலிடத்தே வைத்தாடும் இளமைப்
பருவத்து மகளிரென்றதற்கு “தெற்றிப்பாவை மணலயரும் மென்றோள்
மகளிர்” என்றார். நுதலிடத்தே தோன்றச்  சென்னியிற்  கட்டுதலின்,
தும்பைக்  கண்ணியை நுதலிடத்தே கட்டினான் என்றார்.

     நீர்நாய், நாளிரை பெற்று, மயங்கி, முதலையொடு ஊழ்மாறு பெயரும்
என இயையும். வேல் நிறத்து இங்க பாங்கற்கு உயிர் புறப்படாஅ
அளவைத் தும்பையை நுதலசைத்தான் என வினைமுடிவு செய்க.

     விளக்கம்: பாண்பாட்டாவது, “வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து
வீழ்ந்தார்க்குக், கைவல் யாழ்ப்பாணர் கடனிறுத்தன்று” (பு. வெ. மா. 7:11)
எனவரும். இதனிடையே சில அடிகள் சிதைந்தமையின் இத்துறை யமைதி
நன்கு காண வியலவில்லை. பாடான் பாட்டு என்றும் பாட வேறுபாடுண்டு.
இரை பெறா துறையும் அரவினை வராலென மயங்கிச் செல்லும், நீர்
நாயொடு முதலை மாறுகொண்டு பொரும்; நீர்நாய் தோற்பின் வேறு
நீர்நாய் வென்ற முதலையொடும், முதலை தோற்பின் வென்ற நீர்நாயொடு
வேறு முதலையும் முறையே பொரும் என்பது விளங்க “ஊழ்மாறு பெயரும்”
என்றாரென்க. “அழும்பில்” சோழ வேந்தர்க்குரிய தென்பது,
“பிணையலங்கண்ணிப் பெரும் பூண் சென்னி அழும்பில்” (அகம். 44)
என்பதனாலறிக.