பக்கம் எண் :

168

     

284. ஓரம்போகியார்

     ஓரம்போகியார் மருதத்திணையைப் பாடுவதில் சதுரப்பாடுடையவர்.
ஆதனவினியென்னும் சேரமான் ஒருவன் காலத்தவர். அவினியின் பெயரால்
அவினியாறு   என்றோர்  ஆறு  பூழிநாட்டில்  இருந்திருக்கிறது எனக்
கல்வெட்டுக்களால் (A.R. 96 of 1906) அறியப்படுகிறது. ஐக்குறு நூற்று
மருதப் பகுதியைப் பாடியவர், மகளிர் தாம் விரும்புவனவற்றுள் தம்
நாட்டு வேந்தன் இனிது நெடிது வாழ்தலை ஒன்றாக விரும்புவரென்பதைப்
பல பாட்டுக்களில் எடுத்தோதியுள்ளார். இயற்கைப் பொருள்களின்
நலங்களையும் ஏனை உயிர்களின்  அமைதிகளையும்  நுனித்து  நோக்கி
அழகுறப்பாடும் ஆற்றலுடையவர். இவர் பாடிவாகப் பல பாட்டுக்கள்
தொகை நூல்களுள் உள்ளன. ஒருகால் ஒரு வேந்தன் போர் குறித்து
வீரர் பலரும் வந்து தொகுமாறு தூது விடுத்தான். வீரர் பலரும் திரண்டு
வந்தனர். ஒரு மறவன் நூலரி மாலையணிந்து கையில் வாளொன்றேந்திக்
காலால் நடந்து வந்தான். பகைவரும் வந்து போர்முகத்து நின்றனர். போர்
கடுமையாக நிகழ்ந்தது. அப்போரில் வாளேந்திவந்த மறவன் பகைவர்
படையில் களிறுகளையும் வீரர்களையும் பொருதழித்து மேம்பட்டான்.
அவனுடைய போர்ச் செயல்கள் ஓரம்போகியாரது காட்சியைக் கவர்ந்தன:
தக்கதோரிடத்தே யிருந்து போரை நோக்கி  நின்ற  இச்  சான்றோர் 
இம் மறவனைக் கூர்ந்து நோக்கினார். அப்போது  அவன்  கைவாள்
எதிர்நின்று  பொருத  பகைவீரன்களிற்றை றெிந்து வீழ்த்திற்று. களிறும்
வீழ்ந்தது; வாளும் கோணிப் போயிற்று. உடனே அதன்மேனின்றும்  வீழ்ந்த
வீரன்  எழுந்து  வந்து  பொருதற்குள், வீழ்ந்த களிற்றின்  மருப்பிடையே
வாளைத்  தொடுத்துக்  கோணலைப் போக்கிச் செம்மை செய்துகொண்டு
அவன் வரவு நோக்கி நின்றான். அவ்வீரன் தான் தப்பியது தன்
நல்வினையெனக் கருதித் தான் கைக்கொண்ட வேலுடன் இம்
மறவற்கஞ்சியோடத்   தலைப்பட்டான்.  அதுகண்டவன்  நாணி
நகைப்பானாயினான். இம் மறச்செயல் ஓரம்போகியார்க்கு உவகை
பந்தது. அஃது இப் பாட்டாய் வெளிப்பட்டது.

 வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
5அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த
 ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத்
திரிந்த வாய்வா டிருத்தாத்
தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே.

   திணையும் துறையும் அவை. ஓரம்போகியார் பாடியது.

     உரை: வல் வரகதில் வல் வருகதில் என - விரைய வருக விரைய
வருக என்று; வேந்துபடு விழுத்தூது ஆங்காங்கே இசைப்ப - வேந்தன்
விட்ட பெரிய தூதுவர் போந்து வீரருறையும் இடந்தோறும் ஆங்காங்குச்
சென்று தெரிவிக்க; நூலரி மாலை சூடி - நூலை யரிந்து கட்டிய நூலரி

மாலையைச் சூடிச் கொண்டு;