| காலில் தமியன் வந்த மூதிலாளன் - காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன்; அருஞ்சமம் தாங்கி - தடுத்தற்கரியபோரில் பகைவரை மேற்செல்லாவாறு தடுத்து; முன்னின் றெறிந்த ஒருகை இரும்பிணத்து எயிறு - தான் முன்னே நின்று வாளால் வெட்டி வீழத்தின் களிறாகிய பிணத்தினது கோட்டிடையே; மிறையாகத் திரிந்த வாய் வாள் திருத்தா - வளைவாகக் கோணிய கூரிய வாளை நிமிர்த்துக் கொண்டு; தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகும் - தன்னைக் கண்டு அஞ்சியோடிய பகைவனை அவன் பெயர்த்துக் காட்டிய புறங்கண்டு நகாநிற்கும்; எ - று.
உயர்ந்தோன் தூதாகலின் விழுத்தூது என்றார். பொன்னரி மாலையின் வேறுபடுத்த நூலரிமாலை யெனப்பட்டது. இறந்த யானையின் உடம்பை ஒருகை யிரும்பிணம் என்றார். மிறை - வளைவு. வாள் திருத்தக்கண்ட மறவன் அஞ்சிப் புறங்கொடுத்தோடக்கண்ட மூதிலாளன், அவன் செயல் மறமுடையார்க்கு இழிவு தருவதுபற்றி நாணமுற்று நகைத்தானாதலின், நகும்என்றார். இசைப்ப சூடி, வந்த மூதிலாளன், திருத்தா, நகும் என வினைமுடிவு செய்க.
விளக்கம்: இது பாண்பாட்டு என்னும் துறை; புலவர் ஆக்கித் தரும் இதனைப் பாணன் தன் யாழிலிட்டுப் பாடுதலின், துறை அவன் மேலதாயிற்று. தூதிசைத்தது செவியிற்பட்ட மாத்திரையே ஊர்தி யொன்றும் கருதாது விரையப்போந்தமை தோன்ற, காலில் தமியன் வந்த மூதிலாளன்என்றார். யானைபோலும் வயவர் பிணமும் கிடத்தலின், யானைப் பிணத்தைஒருகை யிரும்பிணம் என்று வெளிப்படுத்தார். வாள் திரிந்ததாயினும் அதன் வாய் மடியாமையின், எயிற்றின் இடையே தொடுத்து வளைவு போகத் திருத்தினானென்பார், திரிந்த வாய் வாள் திருந்தா என்றார். இதனை வஞ்சித்திணைத் துறைகளுள், அழிபடை பட்டோர் தழிஞ்சிக்கும், வருவிசைப் புனலைக் கற்சிறைபோல, ஒருவன் தாங்கிய பெருமைக்கும்,திறம்பட வொருதான் மண்டிய குறுமை க்கும் காட்டுப. --- 285. அரிசில் கிழார் ஒருகால் ஒரு தலைவன் பகைவருடன் போர்செய்ய நேர்ந்தான். இருதிறத்தாருடைய படைகளும் கைகலந்து போர் செய்தன. நெல் மூடைகளைப்போல இருமருங்கும் பிணங்கள் குவிந்தன. அவற்றிடையே நின்று அவன் போருடற்றுங்கால் பகைவர் எறிந்த வேல் அவன் மார்பிற் பாய்ந்து உருவிற்று. புண்ணினின்றும் குருதி பெருக்கெடுத்தொழுகிற்று. அவனும் நின்று போர் செய்யமாட்டாது நிலத்தே சாய்ந்தான். அவன் கையிலிருந்த வேலைத் துடியன் தாங்கினன்; தோற்படையைப் பாணன் வாங்கிக் கொண்டான். சான்றோர் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். இச் செய்தி பாசறைக்குத் தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தவருள் சால்புடைய |