| காண்வரக் கடுந்தெற்று மூடையின் - காட்சியுண்டாக நெருங்க அடக்கிய மூடைகள் போல;... வாடிய மாலை மலைந்த சென்னியன் - வாடிய மாலையையணிந்த தலையையுடை நம் தலைவன்; வேந்து தொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு - அரசன் தனக்குரிய அரசியற்றொழிலைச் செய்யும் அரிய தலைமையிமையுடை அமைச்சர் முதலிய சுற்றத்துடனே; நெடுநகர் வந்தென - நெடிய நகர்க்கு வந்தானாக; விடுகணை மொசித்த - பகைவர் எய்த அம்புகள் மொய்த்த; மூரி வெண்டோள்...மூரிய வெள்ளிய தோள்...; செம்மல் - தலைவனாகிய அவன்; சேறுபடு குருதி உக்கு - நிலத்தைச் சேறு செய்யும் குருதியைச் சொரிந்து; ஓ - ஐயோ; மாறு செறும் நெடுவேல் மார்புளம் போக - மாற்றார் செற்றங் கொண்டெறிந்தநெடிய வேலானது மார்பை உருவிக்கொண்டு உள்ளே புதைய; நிணம் பொதிகழலொடு நிலம் சேர்ந்தனன் - பிணங்களிடையே நின்று பொருதலால் நிணம் படிந்த கழலுடனே நிலத்தில் வீழ்ந்தான்; அது கண்டு - அவன் வீழ்ந்தது கண்டு; பரந்தோர் எல்லாம்- அல்மரலுற்ற சான்றோரெல்லாம்; பிணங்கு கதிர் அலமரும் கழனித் தண்ணடை யொழிய - கதிர்கள் தம்மிற் பின்னிக்கொண்டசையும் நெற்கழனிகளையுடைய மருத நிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத் தொழிந்ததனால்; இலம்பாடு ஒக்கல் தலைவற்கு வறுமையுற்ற இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு; ஓர் கரம்பைச் சீறூர் நல்கினன் எனப் புகழ - எஞ்சிநின்ற தொரு கரம்பையையுடைய சிறிய ஊரைக் கொடுத்தான் என்று புகழ்ந்தோத; குருசில் - குரிசிலாகிய அவன்; தலை பணிந்து இறைஞ்யோன் - நாணித் தலைகுனிந்து தாழ்ந்தான். அவன் சால்பிருந்தவாறு என்னே; எ - று.
வேலும் தோலும் பாணன் முதலாயினார்க்குச் செல்வம் வழங்கற்குத் துணை செய்தமையின், அவை அவர் கையகத்துச் சேர்ந்தன; அவற்றைக் கையாண்டதலைவன் இனிக் கையாளான் என்பது குறித்தற்கு. பிறர்பால் காண்டற்கரிய ஆற்றலும் அறிவுமுடையாரே அரசியற்றலைமைச் சுற்றமாதல் பற்றி அவரை அருந்தலைச்சுற்ற மென்றார். உயிர் இழக்கும் நிலையிலும் சான்றாண்மை குன்றாமை தோன்ற, புகழ்த்தலை பணிந்து இறைஞ்சியோன் என்றார். பாசறையீரே, துடியன் கையது வேல், பாணன் கையது தோல்; சென்னியன், செம்மல், நிலம் சேர்ந்தனன்; கண்டு, எல்லாம் நல்கினன் எனப் புகழ, குருசில், இறைஞ்சியோன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: சால்புமுல்லையாவது, வான்றோயு மலையன்ன சான்றோர் தம் சால்புரைத்தன்று (பு. வெ. அ: 31) என வரும். இசை தொடுத்தற்குரிய நரம்பு தொடையெனப்பட்டது. பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் தொடைமை கேள்வி (பெரும்பாண், 15-6) என்று பிறரும் கூறுவது காண்க. கடுந்தெற்று மூடை, கடுந்தெற்று மூடையின் |