பக்கம் எண் :

172

     

இடங்கெடக் கிடக்குஞ்சாலி நெல்லின் சிறைகொள் வேலி”(பொருந. 245 : 6)
என்பதன்கண்   கடுந்தெற்று  மூடை   யென்றதற்கு  நச்சினார்க்கினியார்,
“நெருங்கத் தெற்றின குதிர்”  என்று  பொருள்  கூறுவர்.  மாறுபாட்டால்
உண்டாகும்  செற்றம்  காரணமாக எறியப்படும் வேல், மாறு செறு
நெடுவேல் எனப்பட்டது.  புறத்தே  மார்பிற்பட்டு  உள்ளே ஊடுருவிச்
செல்வது குறித்து “மார்பு உளம் போக”  என்றான்.  பரந்தோர், 
ஆங்காங்குப்  பரந்து நின்ற சான்றோர்கள். பிறர் தம்மைப் புகழுங்கால்
சான்றோர் நாணுதல் இயல்பு; “தம் புகழ் கேட்டார்போல் தலை சாய்ந்து
மரன் துஞ்ச” (கலி. 119) என்று பிறரும் கூறுதல் காண்க. ஈண்டுக்
கூறியது, சான்றாண்மையுடையோர் உயிர் இறக்கும் எல்லையிலும்
அது குன்றார் என்பது வற்புறுத்தி நிற்பது காண்க.

---

286. ஒளவையார்

     வேந்தரிடையே போர் நிகழ்ந்த காலத்தில் ஒருகால் ஒளவையார்
மறக்குடி மகளொருத்தியைக் கண்டார். நாட்டில் பல இளைஞர்கள் வேந்தன்
பொருட்டுப் போர்க்குச் சென்றனர். அவருள் வென்றோர் சிலர்; வீழ்ந்தோர்
பலர். வென்றி மேம்பட்டுப் போந்த வீரருள் அம் மறக்குடி மகளின்
மைந்தனும் ஒருவனாவன். அது குறித்து அவள் முகத்தில் உவகைக்
கிளர்ச்சி மீதூர்ந்திருந்ததாயினும், வேந்தன் திறத்து அவட்கிருந்த அன்பால்
ஒரு குறையுடையாள் போன்ற பேச்சு நிகழ்ந்தது. அதனை வினவியபோது
வேந்தற்காகப் போருடற்றி உயிர் கொடுத்துப் புகழ் நிறுவுதலினும் மேதக்க
செயல் பிறிதியாதுமில்லை யென வற்புறுத்தினாள். அவள் கருத்தை விளங்க
வுரைக்குமாறு வேண்டினார் ஒளவையார். “என் மகன் போல இளையர்
பலர் எங்கள் வேந்தன் படையில் உளர்; அவர் அனைவரும் அவன்
சென்ற நெறியே வெள்ளாடுபோல் அன்போடு அவனைப் பின் தொடரும்
வீறு பெற்றவர். ஆயினும் உண்டாட்டு முதலிய சிறப்புக்கள் நிகழுங்கால்,
அவரனைவரையும் விடுத்து என் மகனைச் சிறப்பாகப் பேணி யாவர்க்கும்
மேலாகக்கள் வழங்குவன். அத்தகைய சிறப்புப் பெறுபவன் அவ் வேந்தன்
கண்ணீர் மல்கச் சாதல் பெறற்கரிய தொன்றாகும்; அவன் தந்த கள் அப்
போற்றினை என் மகன் பெறுமாறு இன்னமும் செய்திலது” என்றாள். இச்
சொற்களிடையே திகழும் மறமாண்பு ஒளவையார்க்கு வியப்பினைப் பயந்தது.
அவள் நிலையில் தன்னை யொத்த மகளிரனைவரும் மறமகளிராதல்
வேண்டுமென விழைந்தார். தான் அவளாக நினைந்த ஒளவையார் அவள்
கூறிய சொற்களை ஒரு பாட்டு வடிவில் தந்தார். அப் பாட்டு இது:

 வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
5தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே.

     திணை: கரந்தை. துறை: வேத்தியல். ஒளவையார் பாடியது.