பக்கம் எண் :

173

     

     உரை: வெள்ளை வெள் யாட்டுச் செச்சைபோல - வெள்ளிய
நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப்போல; தன்னோரன்ன
இளையர் இருப்ப - தன்னையொத்த இளையர் பலர் நிறைந்திருக்கவும்;
பலர் மீது நீட்டிய மண்டை - அப் பலர்க்கும் மேலாக என் மகனுக்கு
நீட்டித் தரப்பட்டகள்; என் சிறுவனை - என் மகனாகிய அவனை;
கால்கழி கட்டிலில் கிடப்பி -காலில்லாத கட்டிலாகிய பாடையிற்
கிடத்தி; தூவெள்ளறுவை போர்ப்பித்திலது- தூய வெள்ளிய ஆடையால்
மூடுவியாதாயிற்று. அஃதன்றோ வேண்டுவது; எ - று.


     மண்டையில் தரப்படுவதுபற்றிக் கள்ளினை “மண்டை” யென்றது ஆகு
பெயர். யாடுகள் ஒன்று சென்ற வழியே ஏனைய யாவும் செல்வது போல,
வேந்தன் சென்றாங்குச் செல்லும் சிறப்புடைய பண்பும் தொழிலுமுடைய
ரென்றற்கு “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” உவமை கூறப் பட்டது;
அதனை விளக்கற்கு அவ் யாட்டினும் உயர்ந்த உவமப் பொருள்
பிறிதின்மையின், இஃது இறப்ப இழிந்த உவமையன்மை யறிக. தன் மகன்
மேலாகச் சிறப்பிக்கப்பட்டது காட்டுவார், “பலர்மீது நீட்டிய மண்டை”
என்றார்.

     கால் கழி கட்டில் என்றது பாடைக்கு வெளிப்படை. வேந்தன்
பொருட்டுச் சாவும் சாக்காட்டின் மேன்மை வற்புறுத்துவது கருத்தாதலின்,
“அறுவை போர்ப்பித்திலதே” யென்றது, மகன் சாகவில்லையே யெனத் தாய்
இரங்கினாளென்பதன்று என அறிக. மண்டை போர்ப்பித்திலது என
வினைமுடிவு செய்க.

     விளக்கம்:வெள்யாட்டுச் செச்சை, ஆட்டுக் கிடாய். வேந்தனை
யடியொற்றிப் பின் தொடரும் மறவர்களின் ஒருமைப் பண்பும் “யான்
கண்டனைய ரென்னிளையரும்” (புறம். 191) என்றாற்போல, இவ் விளையர்
தம் வேந்தன்  கண்டனையராதலும் உடைமை தோன்ற “வெள்யாட்டுச்
செச்சைபோல” என்றார். மீது, மேம்பட. தன் மகன்பால வேந்தன் முதல்
வரிசை  நல்குதற்குரிய  தலைமைப் பண்புண்டென்று கூறுவாள், “பலர்மீது
நீட்டிய  மண்டை  யென்  சிறுவனைக்  கிடப்பிப் போர்த்திலது” என்றாள்.
“புரந்தார்கண்ணீர்மல்கச்  சாகிற்பின் சாக்கா,டிரந்துகோட்டக்க துடைத்து”
(குறள். 780) என்றும், “பிறந்த பொழுதேயும் பெய் தண்டார் மன்னர்க்
குடம்பு கெடுத்தாரே  மூத்தார் - உடம்பொடு,  முற்றுழிக்  கண்ணு
மிளையவரே திங்கோமாற், குற்றுழிக் காவா தவர்” (புறத். 1318) என்றும்
பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் கருதினராகலின்,  இவ்வாறு  கூற்று 
நிகழ்வதாயிற்றென வறிக. வேத்தியலாவது, (பு. வெ. மா. 2: 13)  என 
வரினும் இதற்குக் காட்டப்பட்ட, “அங்கையு ணெல்லியதன் பயமாதலால்,
கொங்கலர் தாரான் குடைநிழற் கீழ்த்தங்கிச் செயிர் வழங்கும் வாளமருள்
சென்றடையார் வேல்வாய், உயிர்வழங்கும்  வாழ்க்கை யுறும்” என்ற
வெண்பா கருத்தொத்திருத்தல் ஈண்டு நோக்கத்தக்கது.