| 287. சாத்தந்தையார்
சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருதுவென்ற திறத்தை நேரிற்கண்டு வியந்து வாடியவர். முக்காவல் நாட்டு ஆமூர் திருச்சிராப்பள்ளி வட்டத்தில் காவிரியின் வடகரைசை் சார்ந்த நாட்டிலுள்ள ஊர்களுள் ஒன்று. இன்றும் அப்பகுதி முக்காவல் நாடென வழங்குகிறது. பெருநற்கிள்ளியின் மற்போர் மாண்பு கண்டுபாடியதொன்றே இவரது மறப்பண்பினை இனிதெடுத்துக் காட்டும். இக்கிள்ளி அரசு கட்டிலேறுதற்கு முன் தந்தையொடு கருத்து வேறுபட்டு வேறோரிடத்தில்இருந்து ஆங்குள்ள வேந்தன் ஆதரவில் இருந்து வந்தான். அக்காலத்தே அவ்வேந்தன் கரந்தைப் போருடற்ற வேண்டிய கடமை யொன்றுண்டாயிற்று. அவன் தானைக்குத் தலைவனாய் நின்று போரை நடத்தும் பொறுப்புப் போரவைக்கோப் பெருநற்கிள்ளிக்குண்டாகவே, சாத்தந்தையாராகிய சான்றோர் அதனைத் தாமும் உடனிருந்து காணச் சென்றார். தானை மறவர்க்கு அசைவும் அச்சமும் தோன்றாதவாறு நீண்மொழி பேசி அவர்களை ஊக்குவது தலைமக்கள் கடனாகும். ஆகவே, அவன் துடி கொட்டுவோனையும், முரசறைவோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு பணித்தான். அதனைச் சாத்தந்தையார் இப்பாட்டின் பொருளாக வைத்து நமக்கு வழங்கியுள்ளார். இதன்கண், அம்பு தைப்பினும், வேல்வந்து பாயினும், களிறுகள் கோடு கொண்டு தாக்கினும், அஞ்சிப் பிறக்கிட்டு ஓடாமையே மறவர்க்குப் பீடு தருவதாம். அத்தகைய பீடுடையோர் வேந்தனால் மருதநிலத்தூர்கள் பல தரப் பெறுவது உண்மை; ஆயினும் அவர்கள் ஊர் பெறுவதை ஒரு பொருளாக மதியார்; போரில் உயிர் கொடுத்துப் புகழ் பெறுவதையே நன்கு மதிப்பர். மேலும் அங்ஙனம் புகழ் பெற்றோர் மறுமையில் உயர்நிலையுலகம் சென்று அங்குள்ள உயர் நிலை மகளிரை மணந்து பேரின்பம் நுகர்வர். அதனால் அந்த இன்பம் பெறுவது குறித்து நிரை கவர்ந்து குறும்பு செய்யும் வெட்சி வேந்தன் தானை வருவதனை இங்கு நின்றும் காண்பீராக என்று அவனுரைத்த நீண்மொழி விளக்கப்படுகிறது. | துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளு மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கெண்டையின் வேல் பிறழினும் | 5 | பொலம்புனை யோடை யண்ணல் யானை | | இலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் | 10 | தண்ணடை பெறுதல் யாவது படினே | | மாசின் மகளிர் மன்ற னன்றும் உயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால் வம்ப வேந்தன் றானை இம்பர் நின்றும் காண்டிரோ வரவே. |
|