பக்கம் எண் :

175

     

     திணை: கரந்தை. துறை: நீண்மொழி. சாத்தந்தையார் பாடியது.

     உரை: துடி எறியும் புலைய - துடிப்பறை கொட்டும் புலையனே;
எறிகோல்   கொள்ளும்   இழிசின - பறையை   முழக்கும்  குறுந்தடியைக்
கைக்கொண்டு நிற்கும் புலையனே; கால மாரியின் அம்பு தைப்பினும் - கார
காலத்து மழைத் தாரைபோல அம்புகள் வந்து உடம்பின்கண்
தைக்குமாயினும்; வயல் கெண்டையின் வேல் பிறழினும் - வயல்களிற்
பிறழும் கெண்டை மீன்போல் வேற்படை வந்து பாயினும்; பொலம்
புனையோடை அண்ணல் யானை - பொன்னாற் செய்யப்பட்ட
முகப்பட்டமணிந்த பெருமை பொருந்தியகளிறு போந்து; இலங்கு வால்
மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் - விளங்குகின்ற தன் கோட்டின் கூரிய
நுனியை நாட்டிக் குத்துவதாயினும்; ஓடல் செல்லாப் பீடுடையாளர் -
அஞ்சிப் புறங்கொடுத்தோடுதலைக் கருதாத மறப் பெருமையுடைய மறவர்;
நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை-ஆழ்ந்த நீரையுடைய பொய்கைக்கண்
கிளர்ந்தெழுந்த வாளைமீன்; நெல்லுடை நெடுநகர்க் கூட்டு முதல்
பிறழும் - நெல்லையுடைய நெடுமனையின் புறத்தே நிறுத்தப்பட்ட
நெற்கரிசையிடத்து வீழ்ந்து புரளும்; தண்ணடை பெறுதல் -மருதநிலத்
தூர்களைப் பெறுவது; யாவது - யாது பயனாம்; படின் - போர்க்களத்
தேபட்டால்; உயர் நிலை யுலகத்து மாசில் மகளிர் மன்றல் நன்று
நுகர்ப - வீரர் புகும் துறக்க வுலகத்துக் குற்றமில்லாத துறக்க
மகளிரை மணந்து பேரின்பம் நுகர்வர்; அதனால் ---; வம்ப வேந்தன்
தானை வரவு  இம்பர் நின்றும் காண்டிர் - குறும்பு செய்யும் பகை
வேந்தனுடைய தானை வருவதை இங்கிருந்தே காண்பீராக; எ - று.


     புலைய,  இழிசின,  பீடுடையாளர்  பெறுதல்  யாவது;  படின்
மன்றல் நன்றும்நுகர்ப; அதனால் வரவு காண்டிர் என வினை முடிவு
செய்க. காண்டிர் என்றது, கண்டு யாவர்க்கும தெரிவித்து ஊக்குக
என்பதாம். வேலின் முகம் கெண்டைமீன் போலும் வடிவினதாகலின்,
“கெண்டையின் வேல் பிறழினும்” என்றார். ஓடல் செல்லா வென்றதை
ஒரு சொன்னீர்மைத்தாகக் கொண்டு ஓடாத என்றுரைத்தலுமொன்று.
கூட்டு, நெற்கூடாகிய கரிசை. தண்ணடைப் பேற்றினும் மகளிர் மன்றல்
உயர்ந்ததாகலின், “யாவது” என்றார்; என்றது நிரம்பிய பயனுடைத்தன்று
என்றவாறாம். இன்பமும் துன்பமும் விரவிய இந் நிலவுலகினும் இன்பமே
நிலவும் மேலுலகினை “உயர்நிலை யுலகம்” எனவும், போரிற்படின்
நேரே உயர்நிலை யுலகில் மணம் புணர்ந்தின்புறுவதையன்றிப்
போர்க்களத்தே கெட்டொழிவதில ரென்பார், “படின் மாசில் மகளிர்
மன்றல் நன்றும் நுகர்ப” எனவும் கூறினார். வம்பு, குறும்புசெய்தல்.
வாளா இருந்த நம்முடைய நிரைகொண்டு போர் தொடுக்கும் வேந்தன்
என்பான் “வம்ப வேந்தன்” என்றும், நின்றாங்கு நின்று வருபடையின்
அணிநிலை சிதறி வீற்று வீற்றோடிக் கெடுந்திறம் காண்மின் என்பான்,
“இம்பர் நின்றும் காண்டிர்” என்றும் மொழிந்தான்.