| விளக்கம்: கரந்தைியில் நீண்மொழியாவது, மன் மேம்பட்ட மதிக்குடையோர்க்குத், தன் மேம்பாடு தானெடுத் துரைத்தன்று (பு. வெ. மா. 2 : 11) என வரும். துடியற்கும் பறைகொட்டும் புலையற்கும் கூறலின், காண்டிர் எனப் பன்மையாற் கூறினான். எறிகோலை விதந்தமையின், இழிசினன், பறை கொட்டும் பறையன் என்பது உணரப்படும். தண்ணுமை யியக்குவோனையும் பிறர் மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் (புறம். 289) என்பது காண்க. காலமாரி, கார் காலத்துப் பெய்யும் மழை. வேலுக்குக் கெண்டை மீன் வடிவுவமம். வால்மருப்பு - வெள்ளிய மருப்பு; வான்சுதை (குறள். 714) எனச் சான்றோர் கூறுதல் காண்க. புன்செய் நிலம் சிறந்த சீறூர்களினும் நன்செய் மிக்க மருதநிலத்தூர் சிறந்ததாகலின் அதனை விதந்து கூறினான்; வேல் பாய்ந்த மார்புடன் நிற்கும் மறவர்க்கு, தண்ணடை பெருதலு முரித்து (புறம் 297) என்று பிறரும் கூறுவது காண்க. போர்க்களத்துஉயிர் கொடுக்கும் மறவர் துறக்க வுலகடைந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவரென்பது பண்டையோர் கொள்கை; அதனால், உயர்நிலை யுலகத்து நுகர்ப என்றார்; பிறரும், தம்மனை மகளிர்க்கு, வதுவை சூட்டிய வான் படர்ந்தனரே (புறத். 1354) என்பது காண்க. வம்பு- புதுமை. போரில் வஞ்சியாது நின்று பொருது மடிவது, துறக்க வுலகில் அயரா இன்பம் நல்குமென்னும் உணர்வைப் பயத்தலின், வயவர் நெஞ்சில் அஞ்சாமை விளைதல் பயனாயிற்று இது தண்ணடை பெறுகின்றது சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று (பெரிது) என்று நெடுமொழி கூறியது என்பர் (தொல். புறத். 8) நச்சினார்க்கினியர். 288. கழாத்தலையார் ஒருகால் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் தும்பை சூடிப் பொருது வீழ்ந்தனர். அவர்களைக் காண்டற்குச் சான்றோராகிய கழாத்தலையார் போர்க்களத்துக்கே சென்றார். பெருவேந்தர் இருவரும் வீழ்ந்தொழிந்ததனைக் கண்ட அவர், அவர்தம் தானை வீரர் செய்த போர்த்திறத்தையும் கண்டனர். களத்தின் நடுவே போர் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. அவற்றின் பெரு முழக்கத்தால் மூடிய தோலமைதியை யறிந்தார். கூரிய மருப்புக்களையுடைய இரண்டு ஏறுகளைத் தம்முட் பொரவிடுத்து அவற்றுள் வென்றி பெற்ற ஏற்றின் தோலையுரித்து மயிர்களையாது முரசுகட்குப் போர்த்திருந்தனர். போர் கடுமையாக நடந்தது. வேல் மறவர், எதிர்ந்தார் மேல் தத்தம் வேற்படையை மிகத் திறலுடன் செலுத்தினர்; எதிர் வந்த வேலைக் கேடகத்தால் ஆண்மையுடன் தடுத்தனர். இவ்வாறு ஒரு வயவீரன் தன்னை நோக்கி வந்த வேல்களைத் தடுத்து அவற்றைச் செலுத்தினோரைத் தன் வேல் கொண்டு தாக்கி வீழ்த்தினான். எங்கும் அச்சம் பரந்தது. வயவரிடையே ஆரவாரமும் கலக்கமும் உண்டாயின. திடீரென ஒரு வேல் வந்து அவ் வேல் வலவன் மார்பிற் பாய்ந்து ஊடுருவியது. தான் அத்துணை விழிப்போடு போர் செய்தபோதும் மாற்றாரெறிந்த வேல் மார்பிற் பாய்ந்ததற்கு அவன் வருத்த மெய்தாது நாணம் பெரிதுமெய்தித் தலை குனிந்து நிலத்தைச் சேர்ந்தான். பெருகி யொழுகும் குருதியுடன் அவன் மார்பு அசைவதாயிற்று. சிறிது போதில பருந்து முதலிய பறவைகள் மொய்க்கத் தொடங்கின. அவனைக் காண்டற்கு அவன் மனைவியும் வந்து சேர்ந்தாள். அவள் சிறிதுமஞ்சாது |