பக்கம் எண் :

188

     

நோய் செய்வது பற்றி, குத்துக் கோல் “நிறப்படை” யெனப்பட்டது.குறும்பர்,
அரண்புறத்தே முற்றிநின்று போரெதிர்ந்து நிற்கும் பகைவர்; அவரொடு
பொருவது குறித்துப் பூக்கோள் அறையப்படுவதனால், “குறும்பர்க்கெறியும்
ஏவல் தண்ணுமை”யென்றாள்.நாணுடைமாக்கள் என்றதற்கு நாண் உடைந்த
மாக்கள் என்று உரைத்தலுமுண்டு. பிறர்மனை, போர்க்கு ஆகாரென
விலக்கப்பட்ட பார்ப்பனர், நோயுற்றார், மகப்பெறாதார் முதலாயினார் மனை.
“விலையெனப் புகுவள்” என்று பாடமோதுதலுமுண்டு. மறக்குடி மகளிர்
பூவிலைப் பெண்டிர்க்கு நன்கலங்களை வீறுபட வழங்கும் இயல்பினர்;காஞ்சி
சான்ற உள்ளமும், போர் செய்து பெற்ற அருங்கலன்களும் அம் மகளிர்
உடையர்; அவர் பூவை விலக்கியது பூவிலை மகட்குப் பெருவருத்தத்தைச்
செய்ததென வறிக. அவளது வருத்தத்தை அவள் கூறும் பூவிலையொலியே
எடுத்துக் காட்டுதலால் “அளியள்” என இரங்கினாள்.

---

294. பெருந்தலைச் சாத்தனார்

     பெருந்தலைச் சாத்தனார் சிறந்த மறப்பண்புடையரென்பதை இளங்
கண்டீக்கோவும்,  இளவிச்சிக்கோவும்  ஒருங்கிருந்தவழிச்   சென்று
இளங்கண்டீரக்கோவைப் புல்லி இளவிச்சிக்கோவைப் புல்லாதொழிந்த
செயலாலும், புல்லாமைக்குக் கூறிய காரணத்தாலும் நன்கறிந்துள்ளோம்.
குமணன் தந்த வாள் கொண்டு அவன் தம்பி இளங்குமணன் உள்ளத்தை
மாற்றிச் செம்மை செய்த அவரது சிறப்பு நாடறிந்தது. ஒரு கால், பரிசில்
வேண்டிச் சென்ற நம் பெருந்தலைச் சாத்தனார்க்குக் கடியனெடு
வேட்டுவனும், மூவன் என்பானும் பரிசில்தர நீட்டித்தாராக, சாத்தனார்
வேட்டுவனை, “நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக” என்றும்
மூவனை. “ஈயாயாயினும் இரங்குவெனல்லேன், நோயிலையாகுமதி”
என்றும் கூறியது அவரது பெருந்தகைமையை இனிது காட்டி நிற்கிறது.
இத்தகைய சான்றோர் ஒருகால் போர்க்கள  நிகழ்ச்சி  யொன்றை  
நேரிற்  காண  நேர்ந்தது.  இரவில் பாசறைக்கண்தங்கிய தானைத்
தலைவன், பகலில் போர்க்களத்தில் நின்றான். இருதிறத்துப்  படை 
வீரரும்  எதிர்  நின்று  பொருபவர்  தமரென்றும் பிறரென்றும்   
பாராது  கடும்போர்  புரிந்தனர்.  தானைத்  தலைவன் போர்க்களத்துட்
சென்று பகைவரைநோக்கி, நும்பெயரையும் நுங்கள் இறைவன்
சிறப்பையும் விளக்கி நுங்கள் வாழ்நாள் முறையையும் முடித்துக்
கொண்டவர் இங்கு எம்பால் போர்க்கு வருக எனச்சொல்லி எதிர்ந்த
பெருவீரர் பலரை வென்று ஒருபால் நின்றான். அவனது
போர்த்திறங்கண்ட மாற்றார், பாம்புமிழ்ந்த மணியை எவ்வாறு
எவரும் குறுகுதற்கஞ்சுவரோ அவ்வாறே அவனைக் குறுகுதற்கு அஞ்சினர்.
இதனைக்கண்டு வியப்புற்ற பெருந்தலைச்சாத்தனார் போர்முடிந்தபின்
அத்தலைவன் தன் மனைக்கண் இருக்கையில் சென்று அவன் மனைவி
கேட்ப அவன் செயலையுரைத்து மகிழ்வித்தார். அவ்வுரை இப் பாட்டில்
எடுத்துக் கூறப்படுகிறது. இவருடைய வூராகிய பெருந்தலை,
பெருந்தலையூரென்னும் பெயரோடு கோயமுத்தூர் மாவட்டத்தில் உளது.

 வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக்
கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை யாடவர்