பக்கம் எண் :

19

     
 உள்ள முள்ளவிந் தடங்காது வெள்ளென
10நோவா தோன்வயிற் றிரங்கி
 வாயா வன்கனிக் குலமரு வோரே.

     திணையும் துறையு மவை. வெளிமான் துஞ்சியபின் அவன்
தம்பி இளவெளிமானைப் பரிசில் கொடுவென, அவன் சிறிது
கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது.

    உரை: நெஞ்சம் எழு இனி செல்கம் - எம்முடைய நெஞ்சமே
எழுந்திருப்பாயாக, இனி யாம் போவேமாக; பருகு அன்ன வேட்கை
இல்வழி - கண்ணாற் பருகுவது போலும் விருப்பமில்லாதவிடத்து;
அருகிற் கண்டும் அறியார் போல தம்மருகே கண்டுவைத்தும்
கண்டறியாதார்போல; அகன்நக வாரா - உள்ளம் மகிழவாராத;
முகனழி பரிசில் - தம் முகமாறித்தரப் பட்ட பரிசிலை; தாளிலாளர் -
பிறிதோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர்; வேளாரல்லர்-
விரும்பாரல்லர்; வருகெனல் வேண்டும் - இங்ஙணம்
வருவீராகவென்று எதிர்கோடல் வேண்டும்; வரிசையோர்க்கு -
தரமுடையோர்க்கு; பெரிதே உலகம் - பெரிது உலகம்; பேணுநர்
பலர் - விரும்புவோரும் பலர்; மீளிமுன்பின் ஆளிபோல- ஆதலால்
மறம் பொருந்திய வலியையுடைய யாளியை யொப்ப; உள்ளம்உள்
ளவிந்து அடங்காது - உள்ளம் மேற்கோளின்றித் தணியாது;
வெள்ளென - கண்டோர் யாவர்க்கும் தெரிய; நோவாதோன்வயின்
திரங்கி - தம்மைக் கண்டு இரங்காதவனிடத்தே நின்று திரங்கி;
வாயாவன்கனிக்கு உலமருவோர் யாரோ - உள்ளுறக்கனியாத வலிய
பழத்தின் பொருட்டுச் சுழல்வோர் யார்தாம் எ - று.


    வன்கனியென்றது நெஞ்சு நெகிழ்ந்து கொடாத பரிசிலை. உலமாலும்
அலமரல் போல்வதோர் உரிச்சொல். வாயாவன்கனிக்கு உலமருவோர்
யாரோ, நெஞ்சமே, உள்ளம் உள்ளவிந்தடங்காது, யாளிபோல இனி
எழுவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வரிகையோர்க்கு யாளி போல
உள்ளம் உள்ளவிந்தடங்காது என முற்றாக்கி யுரைப்பாருமுளர்.

    விளக்கம்: முகனழி பரிசிலைத் தாளிலாளர் விரும்பியேற்பர்;
தாளாளர் அப்பரிசிலை விரும்பாது, வருகென எதிர்கோடலை விரும்புவர்;
அவர் வரிசையுடையோர்; அவர்க்கு உலகம் பெரிது; அவரைப்
பேணுவோரும் பலர்; ஆதலால், நெஞ்சே, நீ, உள்ளம் உள்ளவிந்தடங்காமல்,
இனி எழு. செல்கம்; எவரும் வெள்ளென, வன்கனிக்கு உலமருவாரல்லர்
எனக் கொள்க. இனி வரிகையோர்க்கு உலகம் பெரிது; அவரைப்
பேணுவோரும் பலர்; அவரது உள்ளம் உள்ளவிந்தடங்காது; அதனால் இனி
எழுக செல்கம்; வன்கனிக்கு உலமருவோர் யாரும் இல்லை என உரை
கூறுவதும் பொருந்தும் என்பார், “வரிசையோர்க்கு...உரைப் பாருமுளர்”
என்றார். அன்புவழிப்பட்ட ஆர்வ நோக்கம், நோக்கப்படும் பொருளை
எடுத்துப் பருகுவது போலும் இயல்பிற்றா மென்றற்குச் சான்றோர் அதனைப்
“பருகுவன்ன நோக்கம்” என்ப. ஈண்டுப் ‘பருகுவன்ன வேட்கை’
யென்றாற்போலப் பிறரும் “பருகுவன்ன காதலுள்ளமொடு” (அகம். 399)
என்பது காண்க.