எவ்வாறெனின், போரில் நீ முந்திச் செல்க என்று ஏவானாதலால் என்றான். அதனை உடனிருந்து கேட்ட ஆவியார் அவனுடைய மறமாண்பை நினைந்து இப் பாட்டின்கண் உருப்படுத்தி நிலை நாட்டியுள்ளார். | எமக்கே கலங்க றருமே தானே தேற லுண்ணு மன்னே நன்றும் இன்னான் மன்ற வேந்தே யினியே நேரா ராரெயின் முற்றி | 5 | வாய்மடித் துரறிநீ முந்தென் னானே. |
திணை: கரந்தை. துறை: நெடுமொழி. ஆவியார் பாடியது.
உரை: எமக்குக் கலங்கல் தரும் - எமக்குக் கலங்கிய கள்ளையே கொடுப்பான்; தான் தேறல் உண்ணும் மன் - தான் தெளிந்த தேறலையே யுண்பான் பெரும்பான்மையும் முன்பு; இனி இப்பொழுது நன்றும் இன்னான் மன்ற - பெரிதும் அன்பில்லா தவானான் தெளிவாக; வேந்து - வேந்தன்; நேரார் ஆரெயில் முற்றி பகைவருடைய கொள்ளற்கரிய அரணைச் சூழ்ந்து; வாய் மடுத்து உரறி - வாயிதழைக் கடித்து உரப்பி; நீ முந்து என்னான் - நீ முற்படச் செல்லென ஏவானாதலால்; எ - று.
மன், பெருமை. இனியெனவே முன்னென்பது வருவிக்கப்பட்டது. கலங்கிய கள் களிப்பு மிகுதியும் உடையது. தேறல் தெளிவும் இனிமையு முடையது. வேந்தனது அன்புடைமையை விளக்குதற்குக் கலங்கல் தரும் தான் தேறல் உண்ணும் என்றான். தன்னைமுந்திச் செல்க என ஏவாமையால்ஆராமையுற்றுக் கூறுதலின், நன்றும் இன்னான் மன்ற என்றான்; ஆயினும் வேந்தன் அன்பிலானல்லன் என்பது கருத்து.
விளக்கம்: தன்னோடொத்த வயவர் பலரையும் உளப்படுத்திக் கூறுதலால், எமக்கே எனப் பன்மையாற் கூறினான். இப்பொழுதும் வேந்தன் கலங்கலை வீரர்க்குத் தந்து தேறலைத் தானுண்டலிற்றீராமையின், மன் ஒழியிசையன்றென்று தெளிக. மன்னே என்பதற்கு மன்னன் என்று பொருள் கூறுதலுமுண்டு;அதற்கு மன்னனென்றும் வேந்தென்றும் பன்முறை கூறியது ஆராமைபற்றி யெனவறிக. போரெனில் முந்துற்றுச் செல்லும்மறமும்போர் வேட்கையும்மிகவுடையான் வேந்தனென்பது பெறப்பட்டது. நேரார் ஆரெயில் என்றது குறிப்பால், பகைத்த வேந்தர் மதிலகத்திலே ஓடுங்கிக்கிடக்குமாறும், கூற்று நிகழ்த்தும் மறவன் தானை அவரை முற்றிறிருக்குமாறும். இனி அரண் கொண்டு செய்யும் போரே நிகழவிருக்குமாறும் தெளிவாகின்றன. 299. பொன்முடியார் சங்ககாலத்துப் பெண்பாற் புலவர் பெருமக்களுள் இவரையும் ஒருவராகக்கருதுவர்; மறக்குடியில் பிறந்து நல்லிசைப் புலமை பெற்றுச் சான்றோரினத்துள் ஒருவராய் மறச்செயல்களைப் பாராட்டிப் பாடும் பண்பு மிக்கவர். இவர் சேரநாட்டுக் குட்டநாட்டின் வடபகுதியில் வாழ்ந்தவர். |