| செகுத்து வருவானைச் செகுக்கும் என்றார். கூர்த்த எஃகம் என இயையும்; வெந்திற்லென்பது இடைநிலை. விளைப் வென்பதனை விளைத்தென்பதன் திரிபாக்காதவிடத்து, காளையாயினான், அதனைத் திரித்துக் கொண்டு வாராநின்றான் என்பது போந்த பொருளாகக் கொள்க. காணுதல், வெற்றி காண்பது. காணிய: செய்யியவென்னும் வினையெச்சம். உரை, புலவர் பாடும் புகழ். கரையை மோதியலைக்கும் கடற்றிரைகளை அக் கரையினின்று செல்லும் தோணி போழ்ந்து செல்வதுபோல, எம்முடைய தானையொடு பொரற்கு அவனுடைய அணியணியாய்த் திரைத்து வந்த தானையை யான் பினந்து சென்று யானைகளை யெறிந்தேன் என உவமம் விரித்துரைத்துக் கொள்க. தடவுங் கயவும் நளியும் பெருமை (தொல். உரி. 28) என்பதனால் பெரிய தலை யென்றலும் உண்டு. களிறு பட்டவழிப் பிடியானைகள் புலம்மபு மென்றார்: யானைமயும், புல்லார் பிடிபுலம்பத் தன் கண் புதைத்ததே, பல் யானை பட்ட களத்து (புறத். 1433) என்று பிறரும் கூறுவது காண்க. நச்சினார்க்கினியர் இதனைக் குதிரை நிலை யென்னும், துறைக்கு (தொல். புறத். 17) எடுத்துக் காட்டுவர். 304. அரிசில்கிழார் வேந்தர் இருவர் தும்பை சூடிப் போர் உடற்றினர். போர் நிகழுங்கால், களஞ்சென்று போர் செய்யவேண்டிய முறைவரப்பெற்ற தானைத் தலைவனொருவன் ஆங்குள்ள குதிரைகளுள்விரைந்து செல்லும் வன்மையுடைய குதிரையைத் தேர்ந்து அதனைத் தான் இவர்ந்து செல்லக் கருதி ஒப்பனை செய்து கொண்டிருந்தான். பகைவருடைய ஒற்றர் அவன் செயலை ஒற்றிச் சென்று தங்கள் பாசறையில் உள்ள தலைவர்களைக்கண்டு, போர்க்கு வரும் முறையுடைய வீரர் தலைவன் தமையனை நேற்று நம் படைவீரருட் சிறந்தோனொருவன் எறிந்து கொன்றான்; அது கண்டு அத்தலைவன், என் தமையனை யெறிந்தவன் எவனோ அவனையும் அவன் தம்பியையும் நாளைக் கொன்றல்லது உணவு கொள்ளேன் என்று நெடுமொழி கூறினன்; கூறியவாறே இன்று தனக்குரிய குதிரையை யாராய்ந்து கொண்டிருக்கின்றார் னெனத் தெரிவித்தனர். அவ்வுரைகளைக் கேட்டிருந்த பாசறையிலுள்ளார் அவன் கூறியது இரண்டாகா தெனத் தம்முட் பேசிக்கொண்டதோடு அஞ்சி நடுக்கமும் கொண்டனர். இச் செய்தியைச் சான்றோராகிய அரிசில்கிழார் அறிந்தார். அவர் அத்தானைத்தலைவனை முன்பே அறிந்தவராதலின் அவன் பாற்சென்றார்; அவர் கேள்வியுற்றவாறே, அவன் தனக்குரிய குதிரையைப் பண்ணுதற்கு விரைகுவது கண்டார்; மாற்றாருடைய ஒற்றர் இவண் வந்து ஒற்றிக்கொண்டு தம் பாசறைக்குச் சென்றுரைத்ததும் அப் பாசறையொர் அஞ்சி நடுங்கினதும் அவற்கு எடுத்துரைப்பவர், இஃது அத் தலைவன் புகழை நிலைநாட்டும் நீர்மையுடையதாதலை யெண்ணி இப்பாட்டினைப் பாடியுள்ளார். போர் செய்யும் வேந்தர் பெயரும் தானைத்தலைவன் பெயரும் கிடைத்தில. | கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி நடுங்குபனி களைஇயர் நாரரி பருகி வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி |
|