பக்கம் எண் :

22

     

209. மூவன்

     மூவனென்பது இயற்பெயர்; மூப்பனென்னும் சொல்போல்வது. அம்
மூவனாரென்பதும் இப்பெயரடியாக வருவதே. சேரமான் கணைக் கால்
இரும்பொறை காலத்திலும் மூவனென்பானொரு தலைவன் காணப்
படுகின்றான். அவன் சேரனொடு பொரும் வகைசெய்து கொண்டு தீங்கு
பல செய்தான். அதுபொறாத சேரமான் அவனைப் போரில்வென்று கொன்று
அவனுடைய பல்லைப்பிடுங்கித் தன் தொண்டிநகர் வாயிற்கதவில் வைத்து
இழைத்துக் கொண்டான் எனப் பொய்கையார் புகன்றுரைக்கின்றார். இவன்
அந்த மூவனோ வேறோ தெரிந்திலது; ஆயினும் இவனை அவன்
குடியில்தோன்றியவன் என்று கொள்ளுவது இழுக்காகாது. இவன் சேய்
என்றும் குறிக்கப்படுகின்றான். இவனுடைய நாடு கடற்கரையைச் சார்ந்த
நெய்தற் பகுதியில் மருதவளஞ்சான்ற நாடாகும். பெருஞ்செல்வமும் கொடை
நலமுமுடையவன் என நாட்டில் இவன் பெயர் பரவியிருந்தது. அதனைக்
கேள்வியுற்ற பெருந்தலைச் சாத்தனார் ஒருகால் இவனைக் காணச் சென்றார்.
இவன் மகளிர் நாப்பண் இன்பத்துறையில் எளியனாய் ஒழுகினான்.
சான்றோரது சால்பினை யறியும் தகைமை இவன்பால் குறைந்து
காணப்பட்டது. குமணன்பால் பெருந்தலைச்சாத்தனார் செய்த
பெரும்புலமையருஞ்செயல் நலத்தையும் இவன் அறிந்திலன். புலவர்க்கு
வழங்கற்கெனக் கடமைப்பட்டிருக்கும் தன் தகுதியையும் இவன் நோக்காது
சாத்தனார் மனம் புண்படத்தக்க நிலையில் இவறலை மேற்கொண்டான்.ஒரு
காரணமுமின்றி இந்த மூவன் தம்மை இகழ்ந்தது சாத்தனார், “எம்மை
இகழ்ந்த வினைப் பயத்தால், இவர்க்கு என்ன தீங்கு நேருமோ?” என்று
அஞ்சி, “நோயிலை யாகுமதி பெரும்” என்று வாழ்த்துவாராய், “நன்செய்
வளஞ்சான்ற நன்னாட்டுக்குத் தலைவ. பெருமலை விடரொன்றில் நின்ற
பழுமரம் பழுத்து மாறிற்றாயின, அதனைச் சார்ந்து வாழ்ந்த புள்ளினம்
செயலற்று வேறுமரம் நாடிச் செல்லும்; அப் புள்ளிமை போல நின்னை நாடி
வந்தேன்,யான் வெறுங்கையுடனே செல்லவேண்டிய நிலையினேனாயினேன்;
நீ ஈயாயாயின் யான் அது குறித்து வருந்துவேனல்லேன்; நீ நோயின்றி
வாழ்தலையே வேண்டுவேன்.மேலும் யான் நின்பால் வந்து வறிது செல்லும்
செய்தி மகிழ்ந்திருக்கும் நினது திருவோலக்கத்தே நினக்கு மிக
அண்மியோர் அன்றிப் பிறர் அறியாராகவேண்டும்; அது நினக்கும்
எனக்கும் நலம் தரும்” என்று கூறினார். இதுவே இப்பாட்டு.

 பொய்கை நாரை போர்விற் சேக்கும்
நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த வாம்பல்
அகலடை யரியன் மாந்தித் தெண்கடற்
5படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும்
 மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
பல்கனி நசைஇ யல்குவிசும் புகந்து
பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப்