| அறுவை, மாசுண இருந்து, பலர் குறைசெய்த அண்ணற்குச் செருவந்து ஒருவரும் இல்லை; சால்புடையோனாயினன் என வினைமுடிவு செய்க ஆக்கவினை வருவிக்க. பலர்க்கு அவர் குறை முடித்து உதவிய அண்ணல், உயிர்போங்காறும் பிறர் செய்யும் ஓருதவியும் வேண்டானாயினன் என்பார், ஒருவரும் இல்லை யென்றார். சிறப்புடைய கண்ணோட்டம் நிறைந்த கண்கள் சிவப்பச் சினந்து தன் ஒரு தோலைக் கொண்டு பகைவர் எறியும் பல படைகளைத் தடுத்தலின், சிறப்புடைச் செங்கண்புகைய ஓர் தோல்கொண்டு மறைக்கும் சால்புடையோன் என்றார். சால்புடையோன் என்றது, ஒரு தோலே அவற்கு அமைவதாயிற்றென்பதை வற்புறுத்துகிறது. மாதும் ஒவும் அசைநிலை. சால்புடையோர் என்பதே பாடமாயின், சால்புடையோர் ஒருவரும் இல்லை எனக் கூட்டி யுரைத்துக் கொள்க. இலரானமைக்குக் காரணம் அவ்வண்ணல் கூட்டொருவரையும் வேண்டாக கொற்றமுடையன் என்பது என்க.
விளக்கம்: களர்நிலத்து ஊறும் உவர்நீர் ஆடையிற்பற்றிய மாசு போக்கும் இயல்பிற்றாதலால், புலைத்தி களர்ப்படு கூவல் தோண்டி அறுவை வெளுக்கும் தொழில்புரிவாளாயினளென்க. புலைத்தி, வண்ணாத்தி. தாது, துகள். இன்றியமையாது வேண்டுவதொன்று குறையெனப்படும். மலர்த்தாரெனற்பாலது எதுகைநோக்கி மலர் தாரண்ணலென நின்றது. தார் என்பதை ஆகுபெயராய் அது கிடந்து விளங்கும் மார்புக்காக்கி, மலரென்றது மார்புக்கு அடையென்றாக்கி, தாரணிந்து விளங்கும் அகன்ற மார்பு என்றுரைப்பினுமமையும். பிறர் துணை வேண்டாது தான் ஒருவனே நின்று போருடற்றும் மற மாண்பைச் சிறப்பிப்பார், செருவத்து ஒருவருமில்லை மாதோ என இரங்குவார் போலக் கூறினார். தலைவனது ஆற்றல் கூறியதானால் பாண்பாட்டாயிற் றென்றொரு குறிப்பு ஏட்டிற் காண்ப்படுகிறது. பாண்பாட்டாவது, வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக், கைவல் யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று (பு, வெ. மா. 7:11) எனவரும். 312. பொன்முடியார் ஒருகால் சான்றோர் கூட்டத்திடையே போர்நிகழ்ச்சிபற்றியும், அதன்கண் மக்கள் ஈடுபட்டுப் போர் செய்வதுபற்றியும் பேச்சுக்கள நிகழ்ந்தன. அக்கூட்டத்துச் சான்றோருள் பொன் முடியாரும் ஒருவர். அவர் மறக்குடியில் பிறந்து நல்லிசைப் புலமைபெற்ற புலவர் பெரு மாட்டியா ராதலால், மக்கள் நன்னடையுடையராய் இருத்தல் வேண்டுமென்ற நோக்கங்கொண்டு அளியும் தெறலும் புரிவது வேந்தர்க்குக் கடன். தெறல் குறித்துப் போர் உளதாமாகலின் அப்போர்க்குக் சென்று வென்றியுறப் பொருது மேம்படுவது காளையர்க்குக் கடன்: அவர்களைப் பெற்று வளர்ப்பது தாயர் கடன்: வளரும் மக்கள் அறிவாலும் ஆண்மையாலும் சான்றோராகச் செய்வது தந்தைக்குக் கடன் என எடுத்துரைத்தார். அவர் கூறியது ஏனைச் சான்றோரனைவர்க்கும் பெருமகிழ்ச்சியை விளைவித்தது. அது பலர்க்கும் பயன்படுமாறு பொன்முடியார் மறக்குடி மகளொருத்தியின் கூற்றில்வைத்து இப் பாட்டு வடிவில் தந்துள்ளார். | ஈன்றுபுறத் தருத லென்றலைக் கடனே சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே | |