பக்கம் எண் :

234

     

என்றமையின்   நாளை   என்பது  பெற்றாம்.  வினைமுடித்து வாகைசூடி
வருதல் ஒருதலை யென்பது கருத்தாதல் தோன்ற, “பாடினி மாலையணிய,
வாடாத்தாமரை சூட்டுவன் நினக்கே” யென்றாள். வாடாத்தாமரை,
பொற்றாமைரக்கு வெளிப்படை ஆங்கு: அசைநிலை.

      விளக்கம்: பூவல், செம்மண் நிலம். படு, பள்ளம்; இது மடுவெனவும்
வழங்கும். தொடீஇய செங்கண், தோண்டுதலாலுண்டாகிய சிவந்த ஊற்றிடம்.
செம்மண் பாங்கினதாகலின் செங்கண் எனப்பட்டது; இயல்பாகவே
சிவந்திருத்தல்பற்றிச் செங்கண் என்றார்; திருமாலின்கண் இயல்பாகவே
சிவந்திருத்தல் கண்டு சான்றோர் “செயிர் தீர் செங்கண் செல்வ” (பரி. 4)
என்றாற்போல. முதுவாய், உயர்ந்த வாயென்றுமாம். அகடு, அஃடு என
வந்தது;  செய்வது “செய்வஃது”  எனவும்,  அகுதை  அஃதையெனவும்
வருவதுபோல ஆய்தம் விரிந்தது. பொழுது மறையின். புறாவும் இதலுமாகிய
பறவைகள்  தத்தம்  சேக்கைக்கண்  ஒடுங்கிவிடுமாகலின், “பொழுதும்
எல்லின்று” என்றாள், சிறுதினைகளை உணக்கற்குப் பெய்தவழி, அவற்றை
யுண்டற்கு வரும் புறா  முதலியவற்றைக்  கண்ணிவைத்துப் பிடிப்ப;
கண்ணிவைத்துப் பிடித்தற்கு இது பொழுதன்று என்பாள், “உணங்கல்
பெய்தற்கு எல்லின்று பொழுது” எனத் தகுதியுற மொழிந்தாள். புதிய
இறைச்சி நல்குதற்குக் காலமன்மையின், உள்ளது பழையதாகிய சுட்ட
முயற்கறி;   அதனை   நல்குதற்கு   இயலுமென்றது,  இல்லென்னாது
விருந்தோம்பும் மனையவளது மாண்பு தெரிவித்து நின்றது. கொடுமை
வளைவு. ஆமான் ஈன்ற இளங்கன்றினை, “நடுங்குதலைக் குழவி” யென்றது
அதன் இளமைமிகுதி குறித்து. கன்றொடு விளையாட்டயரும் சிறார்,
ஆமானுடைய இளங் குழவியைப் பற்றித் தம் சிறுதேர் ஈர்க்கும் கன்றெனப்
பூட்டி விளையாடுவது, மிக்க இளமையுடையாரும் மறச் செயலில் ஈடுபட்டுப்
பயிலும் திறம் கூறுகிறது. நெருதை  ஞாங்கர்  என்றதற்கு  நெருநைக்கு
முன்னாள் என்றும், இடையில் கழிந்த ஒரு நாளைய நிகழ்ச்சி கேட்டறிந்து,
வெற்றி யுண்டாதலை நன்கு தெளிந்து நாளை வந்து நினக்குத் தாமரையும்
நின் பாடினிக்குப் பொற்றாமரையும் நல்குவன் தன்கணவ னென்றும்
கூறினாளென வுரைப்பினு மமையும்.

320. வீரைவெளியனார்.

     வெளியன் என்பது இவரது இயற்பெயர்; வீரை யென்பது இவரதூர். இது
பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள நாட்டைச் சேர்ந்தது; புதுச்சேரிக் கருகில்
வீராம்பட்டினமென இப்போது வழங்குகிறது. அகநானூற்றிற் காணப்படும்
சான்றோர்களுள்  ஒருவரான  வீரைவெளியன்   தித்தனார்   இவருடைய
மகனாராவர். மழையை நோக்கித்தோழி கூறுவதாக இத்தித்தனார் பாடியுள்ள
பாட்டைப் படிப்பவர் இவரது புலமை நலங் கண்டு பெருவியப்படைவர்.
இத்தகைய   புலமை   நலஞ்சான்ற  மகனைப்  பெற்ற  வெளியனாரை
நினையாதிருப்பதற்கும் இடமிராது. வெளியனாரும் நல்லிசைப் புலமை நலம்
சிறக்க வாய்ந்தவரென்பதை இப் பாட்ட எடுத்துக் காட்டுகின்றது. தானைத்
தலைவனொருவன் தன் வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்று வெற்றி
மேம்பாட்டால் வாகை சூடிச் சிறக்கின்றான். அவனைக் காண்பது குறித்துப்
பாணனொருவன் செல்கின்றான், அவனைக் காணும் வெளியனார், அத்
தலைவனது ஊர்நலத்தை யெடுத்தொதி அங்குச் சென்று தங்கிச் செல்லுமாறு
இப் பாட்டால் அறிவுறத்துகின்றார்.