பக்கம் எண் :

242

     

ஏந்திய தன் வேல் கெடுமாயின், தன் வாளைப் பெரிய யானையை
எறிதற்பொருட்டு எடுத்தால் எடுப்பனே தவிரப் பிறசெயற்கு அதனை
எடான் எனப் போர்ச் சிறப்பும் கூறியுள்ளார். அவனது ஊர் நலத்தை
யுரைக்கும் பகுதி தெளிய விளங்காவாறு சிதைந்துளது.

 புலிப்பாற் பட்ட வாமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத் தூட்டும்
கா................பரிசிலர்க்
குள்ளியது சுரக்கு மோம்பா வீகை
 5.வெள்வே லாவமாயி னொள்வாள்
 கறையடி யானைக் கல்ல
துறைகழிப் பறியா வேலோ னூரே.

     திணையும் துறையு மவை...............கிழார் பாடியது.

     உரை: புலிப்பாற்பட்ட வாமான் குழவிக்கு - புலியிடத் தகப்பட்டிருந்த
தாவும் மானினுடைய கன்றுக்கு; சினங்கழி மூதா - சினமில்லாத முதிய
கறவைப்பசு; கன்று மடுத்து ஊட்டும் - தன் கன்றெனச் சேர்த்தத் தன்
பாலை யுண்டற் கமைந்திருக்கும்; .................பரிசிலர்க்கு உள்ளியது சுரக்கும்
ஓம்பா ஈகை - பரிசிலராகிய பாணர் முதலாயினார்க்கு அவர் கருதியதனைக்
கருதியவளவே வழங்கும் தள்ளதா ஈகையினையும்;வெள்வேல் ஆவமாயின்-
வெள்ளிய   வேல்   ஏந்திச்   செய்யும்   போர்  உளதாயின்; கறையடி
யானைக்கல்லது - உரல்போன்ற காலையுடைய களிற்றைக் கொல்லுதற்கன்றி;
ஓள் வாள் உறை கழிப்பறியா - ஒள்ளிய வாளை அதன் உறைக் கூட்டினின்றும்
கழித்தலைச் செய்யாதே; வேலோன் ஊர் - வேற்படையையுடைய தலைவனது
ஊர்; எ - று.


    தன் கன்றை யொழித்துப் பிறிதொரு கன்று வரின் அதனை அணுக
விடாத சினமுடைய நல்லாவின் வேறுபடுத்தற்கு “சினங்கழி மூதா” என்றார்.
சினங்கழிந்ததற்கு ஏதுக் கூறுவார், “மூதா” எனக் குறித்தார். மான் கன்றைத்
தன் கன்றுபோற் சேர்த்துப் பாலுண்பித்தலின் “கன்றுமடுத் தூட்டும்”என்றார்.
யானை சேய்மையில் வரின் வேற்படையும், அண்மைக் கண்ணதாயின்
வாட்படையும் வேண்டுவனவாம். “வேந்தூர் யானைக் கல்லது, ஏந்துவன்
போலான்றன் இலங்கிலை வேலே” (புறம். 301) என்பதனால் வேற் படையும்
யானைக்கல்ல தெறிப்படா தென்றறிக.

     விளக்கம்: ஆவம், போர். வேலெறிந்து செய்யும் போர்;
வெள்வேலாவம் எனப்பட்டது. வேல் கொண்டு யானையை யெறிவதில்
வீரர்க்கு மிகுவது சிறப்பு.