324. ஆலத்தூர்கிழார் ஆலத்தூர் என்னும் பெயருடைய ஊர்கள் பல இருப்பினும். இச் சான்றோரது ஊர் சோழநாட்டுக் காவிரித் தென்கரை நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆலத்தூ (A. R. No. 273 of 1927) ராகலாம்; இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன்சேட் சென்னி நலங்கிள்ளியையும் பாடிச் சிறப்புற்றவர், ஒரு கால் ஒரு தலைவன் போரில் புகழுண்டாகப் பொருது வென்றியால் வீறுகொண்டு விளங்கினான். அவன் வன்புல நாட்டுச் சீறூர் ஒன்றிற் குரியன். தன் வேந்தனுக்குப் படை வேண்டுமிடத்து வாளுதவியும், வினை வேண்டு மிடத்து அறிவுரை வழங்கியும் சிறந்து நின்றமையின், வேந்தன் அவனைத் தனக்கு நெஞ்சறிந்த நற்றுணைவனாகக் கொண்டு பேணினான். வேந்தனுக்கு நற்றுணைவனாகப் பெற்றும் அவன் தன் மனநிறை நெகிழாமல் பண்டுபோல் ஒரு தன்மையனாய் ஒழுகினான். ஒருநாள் தன் சீறூரில் தனக்குரிய பாணருடன் அவன் கூடி இன்புற்றிருந்தான். அப் போழ்து அவன்பாற் சென்றிருந்த ஆலத்தூர் கிழார், அவனது வல்லாண்மையை எடுத்துக் கூறலுற்று அவன் தன் பெருமை கருதாது பரிசிலர் நடுவண் மிக எளியனாய்க் கூடியிருப்பதைப் பாராட்டி இப்பெற்றியோன் வெற்றி தரும் பெரிய தானையையுடைய வேந்தனுக்கு உயிர்த்தணைவன்; அவன் இறப்பின் அவனோடு உடன் இறக்கும் ஒள்ளிய நண்பன் என்ற கருத்தமைய இப்பாட்டைப் பாடினார். | வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப் புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய் வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை யுடைின் சுரையுடை வான்முள் | 5. | ஊக நுண்கோற் செறித்த வம்பின் | | வாலஅர் வல்விற் குலாவரக் கோலிப் பருத்தி வேலிக் கரும்பை பார்க்கும் புன்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க் குமிழுண் வெள்ளை மறுவாய் பெயர்த்த | 10. | வெண்காழ் தாய வண்காற் பந்தர் | | இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப் பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை வலம்படு தானை வேந்தற் குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே. |
திணையும் துறையு மவை. ஆலத்தூர் கிழார் பாடியது.
உரை: வெருக்குவிடை யன்ன வெருள் நோக்குக் கயந்தலை - காட்டுப் பூனையின் ஆணைப்போல வெருண்ட பார்வையினையும் பெரிய தலையினையும்; புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய் - பறவைகளின் ஊனைத் தின்பதனால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வாயினையுமுடைய; |