| வெள் வாய் வேட்டுவர் - வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின்; வீழ் துணை மகாஅர் - தம்மில் ஒருவரை யொருவர் விரும்பி நட்புக் கொண்டுறையும் சிறுவர்கள்; சிறியிலை உடையின் சுரையுடை வான் முள் - சிறிய இலைகளையுடைய உடைவேல் மரத்தின் உள்ளே புழையையுடைய வெள்ளிய முள்ளை; ஊக நுண் கோல் செறித்த அம்பின் - ஊகம்புல்லின் நுண்ணிய கோலில் செருகிய அம்பை; வலாஅர் வல்வில் குலாவரக் கோலி - வளாரால் செய்யப்பட்ட வில்லின் வைத்து வளையுண்டாக வலித்து; பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் - பருத்தியாலாகிய வேலியடியில் உறையும் காட்டெலியை வீழ்த்தற்குக் குறிபார்த்திருக்கும்; புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர் - புன்செய்கள் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூரின்கண்; குமிழ் உண் வெள்ளை மறுவாய் பெயர்த்த வெண்காழ் தாய - குமிழம் பழத்தை யுண்ணும் வெள்ளாடுகள் எருவாய் வழியாக வெளிப்படுத்த வெள்ளியகொட்டைபோலப் பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற; வண் கால் பந்தர் - வளவிய கால்கள் நிறுத்தப்பட்ட பந்தரின்கீழ்; இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து - இடையன் கொளுத்திய சிறிய சுடரையுடைய விளக்கொளியில்; பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை - பாணர் சூழ்ந்திருக்க அவரிடையே வீற்றிருந்த நாணமாகிய நற்பண்பை யுடைய நெடுந்தகையாகிய தலைவன்; வலம்படு தானை வேந்தற்கு - வெற்றியுண்டாகும் தானையையும வேந்தனுக்கு; நெஞ்சறி துணை - மனமறியக்கொண்ட உயிர் துணைவனாவான்; எ - று.
வெருக்கின் ஆண் விடையெனப்பட்டது. நோக்கும் தலையும் வாயு முடைய மாஅர் என இயையும். வெற்றிலை தின்னாத வாயென்றதற்கு வெள்வாய் என்றார். இடக்கர் மொழிகளை இடையிடையே கூசாது மொழியும் வாயெனினுமமையும்; அல்லதூஉம், எக்காலத்தும் கரவில்லாத சொற்களையே வழங்கும் வாயென்றுரைப்பினுமாம். வேலிகளில் பருத்திச் செடிகள் நிரல் நிரலாக நிற்ப அவற்றின் அடியின் வளையமைத்து வாழும் காட்டெலியைப் பருத்திவேலிக் கருப்பை யென்றார். எருவை வெளியிடும் வாயை மறுவாயென்றது அவையடக்கு. காழ் போல்வதனைக் காழ் என்றார். பாணரிடத்து மிக்க அன்பு செய்து எளியனாயுள்ளானென்றற்கு பாணரொடு இருந்த நெடுந்தகை யென்றும், மறத்துறைக்குரிய அறநெறி பிறழ நிகழ்வனகாண்டற்கும் செய்தற்கும் உள்ளம் சுருங்குதற்கேதுவாகிய மானம் நிறைந்து அதனால் நெடும்புகழ் பெற்றவன் என்பது தோன்ற, நாணுடை நெடுந்தகை யென்றும் கூறினார். உலந்துழி யுலக்கும் நெஞ்சறி துணை யென்றார், உற்றவிடத் துயிர் வழங்கும் உணர்ச்சி யொத்த உண்மை நண்பன் என்றற்கு. சீறூர் நெடுந்தகை, வேந்தற்கு நெஞ்சறி துணைனெக் கூட்டி வினைமுடிவு செய்க. பகுவா யென்றும் பாடம்.
விளக்கம்: பாண்டிமண்டலத்து மதுரோதய வளநாட்டு ஆலத்தூர் நாட்டு ஆலத்தூரும், தொண்டை நாட்டுப் புலியூர்க்கோட்டத்து ஆலத்தூரும் |