| இரத்திமரத்தின் அசைகின்ற நிழலில்; கயந்தலைச் சிறாஅர் - மெல்லிய தலையையுடைய சிறுவர்கள்; கணை விளையாடும் - அம் பெய்து விளையாட்டயரும்; அருமிளை இருக்கையது - கடத்தற்கரிய காவற் காடுகளையுடைய நாட்டின்கண்ணே யுளது; வென்வேல் வேந்து தலைவரினும் தாங்கும் - வெல்லும் வேலையுடைய வேந்தர்தம் தானைச் சுற்றத்துடனே திரண்டு தன்பால் வந்தாலும் தாங்கக்கூடிய; தாங்கா ஈகை நெடுந்தகை ஊர் - குன்றாத ஈகையையுடைய நெடுந்தகையாகிய தலைவனது ஊர்; எ - று.
விடுநிலம், ஆனிரைகளின் மேச்சலுக்கென ஊரவரால் பொதுவாக விடப்பட்ட நிலம். குரால், கன்றையுடைய பசு; ஒருவகைப் பசுவுமாம். கலுழ்கண் நீர் - கலங்கிய இடத்துண்டாகிய நீர். நீர் சிறிதே யூறுதலின், ஒருவன் பின்னொருவராக முறைகொண்டு சென்று (queue system) முகந்துண்ணுமாறு தோன்ற முறையின் உண்ணும் எனவும், அதனால் தமது வேட்கை தீரவுண்டு, பிறர்க்கும் அவ்வாறுவழங்குதற்கு வேண்டுமளவு கிடைக்கப் பெறாமையால், நிறையா வாழ்க்கை யெனவும் கூறினார். செப்பிய வஞ்சினம் தப்பாது செய்து முடிக்கும் மறமாண்பு உடைமை தோன்ற, முழுச் சொல்லாடவர் என்றார்; சொல்லினும் செய்கையே பெரிதுடைய ரென்றுரைப்பினுமமையும். காழ்பொருந்திய கழியைக் காழென்றார். வெயில் மழை காற்று முதலியவற்றால் சலியா திருத்தலின் மன்றம் மதுகை மன்ற மெனச்சிறப்பிக்கப்பட்டது. வேந்து வரினும் எனவே வேந்தன் தன் தானைச் சுற்றம் புடைசூழ வருதலும், தாங்கும் என்றதனால், அவர் வேண்டுவன தந்து ஓம்பும் வளனுடைமையும் பெற்றாம், ஆடவர், முன்றில் கூறு செய்திடுமார் வைத்த நிணம் கமழும் மன்றத்து நீழல் சிறார் விளையாடும் இருக்கையது நெடுந்தகையூர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: கேழன் கண்ணும் கடிவரை யின்றே (தொல். மர. 35) என்றதனால், களிறு பன்றிக்காயிற்று. பெரும் பெயல், பெருமழை. எங்கும் பரந்து பெய்யாது ஒருகாலத் தோரிடத்தே மிகுதியாகப் பெய்த மழையை வரைந்து சொரிந் திறந்தென என்றார். பெயலை யெதிர் நோக்காத காலத்தில் பெய்த மழையை வம்பப்பெயல் என்றமையின். அது பெரும் பெயலாயினும் நீர் நிலத்தே சுவறிவிடுதலால், குழிகளில் நின்ற நீர் சிறிதானமைபற்றி, குழிகொள் சின்னீர் எனல் வேண்டிற்று. குராற் பசு நீருண்ணவரின் அதனைத் தடாராதலின் குராலுண்டலின் என்றார் கிளைத்தல், தோண்டுதல். துளி துளியாக வூறும் நீரூற்று, கலுழ்கண் ணூறல் எனப்பட்டது. முள்ளையுடைய பன்றி, மூளவுமா என வழங்கும். முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை (மலைபடு. 171) எனப் பிறரும் கூறுதல் காண்க. வட்டுவர் வாழும்வன்புலச்சீறூராதலால், அங்கு வாழ்பவர் சிறப்பாக வுண்ணும் உணவை யெடுத்தோதினார். ஊனுணவுண்போர் உடும்பின் இறைச்சியும் நிணமும் மக்களுடம்புக்கு மிக்க வன்மை தருவது என்பர். எடும்பினைப் பற்றிக் கொணர்ந்த வேட்டுவர் அதனைத் தம்முள்றிலில் வைத்து அறுத்துத் தம்மவரிடையே கூறுசெய்து கோடல் இயல்பு. இரத்தி, இரத்தி யென்னும் மரம்; இதனை இலந்தை மரமென்றும் |