கூறுவர். இரத்தி நீடியவகன்றலை மன்றம் (புறம். 34) எனப் பிறரும் கூறுதல் காண்க. அலந்தலை; அலந்த தலையென்பதன் விகாரம். முதியோராகிய வேட்டுவர் உடும்பு கொணர்ந்து அதன் ஊனைச் சுட்டுத் தம்மிற் கூறுசெய்துண்டு இன்புறா நிற்ப, அவருடைய இளஞ்சிறார்கள் வில்லெடுத்து அம்பு தொடுத்து விளையாடா நிற்பர் எனச் சீறூர் வாழ்நர் சிறப்புக் கூறிய ஆசிரியர் அவ்வூர்க்குரிய தலைவன் தகைமையை, வேந்து தலைவரினுந் தாங்குந் தாங்கா ஈகை நெடுந்தகை யென்று சிறப்பிக்கின்றார். தாங்கா ஈகை யென்றது, ஓம்பா வீகை யென்பது போல நின்றது. மதுகை விளைவிக்கும் மன்றத்தை மதுகை மன்றம் என்றார் என்று உரைப்பினுமமையும். குறிஞ்சி நிலத்தவர் சுனை விளையாடியும்; முல்லை நிலத்தவர் கொல்லேறு தழுவியும் தமது மதுகை மாண்புறுவிக்கும் இடம் மன்றமென வறிக. 326. தங்காற் பொற்கொல்லனார் தங்காலென்பது விருதுநகர்க்கு அருகிலுள்ளதோரூர். இளங்கோவடிகள் இதனைத் தடம்புனற் கழனிற் கழனித் தங்காள் (சிலப். மதுரைக். 23:118) என்று சிறப்பிப்பார். இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் இவ்வூர் சிறப்புற்றிருந்தது. இதனை இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால் (A. R. No. 564 of 1922) என்று கல்வெட்டுக்கள் கூறும். மாறவன்மன் சுந்தர பாண்டியன் (1) காலத்தில் இவ்வூரிலுள்ள மடமொன்றில் பாரதமும் இராமாயணமும் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கல்வெட்டொன்று (A. R. No. 546 of 1922) கூறுவதனால் இவ்வூர் கல்விவளம் சிறந்த நல்லூராதலை யறியலாம். சங்கத் தொகை நூலாசிரியர்கள் காலத்தில் இவ்வூரில் நல்லிசைச் சான்றோர் பலர்தோன்றியிருக்கின்றனர். ஆத்திரேன் செங்கண்ணனார் என்னும் சான்றரோரும் இப் பாட்டைப் பாடிய பொற்கொல்லன் வெண்ணாகனாரும் அவருள் சிறந்திருக்கினற்னர்.செங்கண்ணனார் பாட்டொன்று நற்றிணையிலும், தொகுக்கப்பட்டுள்ளன. புறத்தில் இவ்வொரு பாட்டுத்தான் காணப்படுகிறது. இதன் கண், இவர் பெயர் தங்காற் பொற்கொல்லனா ரெனக்குறிக்கப்பட்டுள்ள தாயினும் அகத்தில் இவர் பெயர் பொற்கொல்லன் வெண்ணாகாரெனக் காணப்படுதலால், இவரது இயற்பெயர் வெண்ணாகன் என்று அறிகின்றோம். தங்காலைத் தண்காலென்றும் பொற்கொல்லனாரென்பதைப் பூட்கொல்லானரென்றும் சில ஏடுகள் குறிக்கின்றன. ஒருகால் இவர் மறக்குடித் தலைவன் ஒருவன் மனைக்குச் சென்று அவனைக் கண்டார் அவன் மனைவி விருந்தோம்பும் விருப்பு நிறைந்தவளாகவும், அவன் பெரும் போரில் பகைவருடைய பெருங் களிறுகளைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னைக் கொணர்ந்து தன்பால் வரும் பாணர் முதலாயினார்க்குப் பரிசில் நல்கும் பண்புடையனாகவும் இருப்பதுகண்டு இப் பாட்டின்கண் வியந்து பாடியுள்ளார். | ஊர்முது வேலிப் பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகிளம் பெடை உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச் சிறையுஞ் செற்றையும் புடையுந ளெழுந்த | |