பக்கம் எண் :

257

     
 வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்த னொருவ னாகித்
தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
காழி யனையன் மாதோ வென்றும்
 5.பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்
 புரவிற் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.

     திணையும் துறையுமவை. மதுரைக் கணக்காயனார் பாடியது.

     உரை: வேந்துடைத்தானை முனை கெட நெரிதர - தன்
வேந்தனுடைய படைப் பகுதியின் முன்னணியானது கெட்டழியுமாறு
பகைப்படை நெருக்கி யடர்த்தலால்; ஏந்து வாள் வலத்தன் ஒருவனாகி -
உயர்ந்த வாளை வலக்கையில் தாங்கிப் பொருவோன் தான் ஒருவனேயாய்
நின்று; தன் இறந்து வாராமை விலக்கலின் - நேர்வரும் அப் பகைவரது
பெரும்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதபடி இடைநின்று தாக்கித்
தடுக்குமாற்றால்; பெருங்கடற்கு ஆழி யனையன் - பெரியகடலைத் தடுத்துத்
தாங்கிநிற்கும் கரையை யொத்திருக்கின்றான்; என்றும் பாடிச் சென்றோர்க்
கன்றியும் - எப்போதும் தன்னைப் பாடிப்ச் சென்ற பரிசிலர்க்கேயன்றி;
புரவிற்கு ஆற்றா வாரிச் சீறூர் - புரவுவரி செலுத்துதற்கும் ஆற்றாத
வருவாயையுடைய சீறூரில் வாழும்; தொன்மை சுட்டிய வண்மையோன் -
வழி வழியாக வரும் வண்மைக்குணமும் உடையவன்; எ - று.


     வேந்தனுடைய முன்னணிப்படை நிற்றலாற்றாது கெடும்படி பகைவரது
பெரும்படை அடர்த்து வருவது தோன்ற “பெருங்கடற் காழி யனைய”
னென்றதனால் பகைவர் தானை கடல்போற் பெருகிவந்தவாறாயிற்று. வாரிச்
சீறூர் எனக் கூட்டுக. புரவென்றது, புரவுவரியை, கொடையும் பிறவிக்
குணமாகலின், “தொன்மை சுட்டிய வண்மை” என்றார்.

     விளக்கம்: வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றவன் தானைத்
தலைவனாய் நின்று பொருமிடத்து, பகைவர் பெரும் படையொடு போந்து
தன் முன்னணிப்படை நில்லாது கெட்டழிந்தோட நெருக்கியடர்க்கக்
கண்டான்; கண்டவன் வேறே துணை வேண்டாது தான் ஏந்திய வாளே
துணையாக நின்று, பகைவரது கடல்போலும் பெரும்படை தன்னைக் கடந்து
மேற்செல்லாவண்ணம் பொருது தடுத்து மேம்பட்டான்; இதனைச் சுருங்க
வுரைக்கலுற்ற ஆசிரியர், “ஒருவனாகித் தன்னிறந்து வாராமை விலக்கலின்,
பெருங்கடற்கு ஆழியனையன் மாதோ” என்று பாராட்டினார், ஆழி, கரை,
பாடிச் சென்றோர்க்கன்றியும் பெருங்கடற்கு ஆழியனையன் என இயையும்.
பாடிச்சென்றோர் கொளங்க கொளக் குறையா வண்மையோனாதலின்
ஆழியனையன் என்றாரென்க.