| பாடிச்சென்ற பரிசிலர்க்கேயன்றி, தான் உறையும் சீறூரில் உள்ள தன் சுற்றத்தார்க்கும் அவன் வருவாயாகவுள்ளான் என்றுமாம். வாரி புரவிற் காற்றாச் சீறூர் எனவே கொண்டு, வருவாயால் இறையிலியாய் விடுதற்கும் ஆற்றாத சிறியவூர் என வுரைப்பினுமமையும். வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை (தொல். புறத். 8) என்பதற்கு இதனை யெடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 331. உறையூர் முதுகூத்தனார் இச் சான்றோர் பெயர் சில ஏடுகளில் முதுகூற்றாரெனவும், உறையூர் முதுகூற்றனாரெனவும் மூதுகூத்தனாரெனவும் காணப்படுகிறது. இவர் வீரைவேண்மான் வெளியன் தித்தன் என்பானைப் புகழ்ந்து பாடுகின்றார். உறையூரில் நடைபெற்ற பங்குனி விழாவை, விறற்போர்ச் சோழர், இன்கடுங் கள்ளின் உறந்தை யாங்கண், வருபுனல் நெரிதரு மிகுகரைப் பெரியாற்று, உருவ வெண்மணன் முருகுநாறு தண்பொழிற், பங்குணி முயக்கம் (அகம். 137) என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். இப் பங்குனி விழாக் காலத்தில் திருவரங்கத்துப் பெருமாளை உறையூர்க்குக் கொண்டு சிறப்புச் செய்வதுண்டென ஸ்ரீரங்கத்துக் கோயில் கல்வெட்டுக்கள் (A. R. No. 16 of 1936-7) கூறுகின்றன. இவர் பாடியனவாகச் சில பாட்டுக்கள் தொகை நூல்களில் உள்ளன. இப் பாட்டின்கண், சீறூர்த் தலைவன் ஒருவனுடைய இல்லாண்மையைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இவன் நல்குரவு உண்டாகுமாயின், அக் காலையில் தன்பால் இல்லாவற்றை விரையப் படைத்துக் கொள்ளும் வன்மைமிக்கவன், தன்பால் உள்ளது சிறிதாயினும் வருவோர் வரிசையறிந்து வழங்கும் வண்மையுடையன்; பொருள் மிகவுளதாகிய விடத்துப் பலர்க்கும் வரையாது வழங்குவான் என்று அவன் ஈகை நலத்தை எடுத்தோதுகின்றார். | கல்லறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல் வில்லேர வாழ்க்கைச் சீறூர் மதவலி நனிநல் கூர்ந்தன னாயினும் பனிமிகப் புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும் | 5. | கல்லா விடையன் போலக் குறிப்பின் | | இல்லது படைக்கவும் நல்ல னுள்ளது தவறிச் சிறிதாயினும் மிகப்பல ரென்னான் நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும் இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில | 10. | வரிசையி னளிக்கவும் வல்ல னுரிதினிற் | | காவன் மன்னர் கடைமுகத் துகுக்கும் போகுபலி வெண்சோறு போலத் தூவவும் வல்லனவன் றூவுங் காலே. |
திணையும் துறையுமவை. உறையூர் முதுகூத்தனார் பாடியது. |