| எம்மனோர் இவ்வுலகிற் பிறத்தற்கேது, நும்மனோர்பால் கிடந்த அன்பும் அறமுமேயாம்; நும்மனோர்பால் அவை இலவாயின், எம்மைப்போல்வார் பிறவார் என்பார், மன்பதை...மாதோ எனறார். புரைமை - உயர்வு புரையுயர்பாகும் (தொல். சொல்-300) என்பது காண்க. மன்பதை காக்கும் புரைமைக்கு அன்பும் அறமும் அடிப்படையெனவறிக. பொருளின்மை கருதி என் மனைவி என்னை வெறுப்பவளல்லள்; அவட்கு என் உயிரே பொருள்; பொருளை யுயிராகக் கருதும் புன்மை என் மனைவிபாலும் கிடையாதென்பார், செயிர்தீர் கொள் கை யெம் வெங் காதலி என்றும், என் பிரிவு அவளைப் பெரிதும் வருத்துமாகலின், அவ்வருத்தம் இல்லையாமாறு யான் செல்கின்றேன் என்பார், அறனில் கூற்றம்...விடுத்தேன் என்றார், பெறக் கருதிய பரிசிலின்றி வறிது செல்லுமாற தோன்ற, புலம்பு முந்துறுத்து என்றார். வேறு பிற செல்வர்பாற் சென்ற பரிசில் பெறவும் கருதிற்றிலேன் என்பார், பெருங்கை யற்ற என்று குறித்தார். கை - செய்கை, நின்னால் வெகுளப்பட்ட பகைவருடைய அரண் நின்னால் அலைப்புண்டு தன்னைக் காப்பாராற் கைவிடப்பட்டு அழிவது போல, யானும் அவல நெஞ்சமொடு பெருங்கையற்ற புலம்புமுந்துறுத்து மனமழிந்து செல்கின்றேன் என்பது சேரமான் தன்னை வெகுண்டு பரிசில் தாராதொழிவது அறமன்றென் பதனைக் குறித்து நிற்கிறது. அரண்போலப் பெருங்கை (முயற்சி) அற்றென்க. புலம்பு ஈண்டு வறுமைமேல் நின்றது; வறுமையின் பயன் அதுவாகலின். வாழியர் குருசில் என்றது நின் வாழ்வு பயனற்றதென்பது குறித்து நின்றது. உயிர்வெங்காதலி யென்பதற்கு என்னுயிரை விரும்புயுறையும் என் மனைவி என்று பொருள் கூறுக. எம்மென்றது உயிரையும் தன்கண் உளப்படுத்தி நிற்றலின், அப்பாடம் அத்துணைச் சிறப்பின்றெனவறிக. --- 211. சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறைபால் பரிசில் வேண்டி வந்த பெருங்குன்றூர்குழார் சின்னாள் அவன்பால் தங்கிப் பரிசில் எதிர் நோக்கியிருந்தார். அவன் வேண்டும் பரிசில் நல்கிவிடாது நீட்டித் தான். அவர் இருந்த காலத்தும் அதற்கு முன்பும் அவ்விரும்பொறை முரசு முழங்கும் தானைகொண்டு பகையரசர்மேற் சென்று அவரொடு வஞ்சியாது பொருது வெற்றி மேம்படுதலைக் கண்டிருந்தார். அவன் கொற்றத்தையும் அவ்வப் போது நம் பெருங்குன்றூகிழார்பாடி அவனைச் சிறப்பித்தார். அவனும் அவரது செய்யுணலத்தை நுகர்ந்து வியந்து இன்புறற்றான். அதனால் பெருங்குன்றூர்கிழார் தாம் கருதியவாறு அவன் சிறந்த பரிசில் நல்கி விடுப்பனென எண்ணி யின்புற்றார். அவனும் அவர் எதிர் பார்த்தற்கேற்ற வகையில் பரிசில் நல்குவான் போலும் செய்லகள் சில செய்தான். இவ்வாறு நாட்கள் பல கழிந்தன. முடிவில் அவன் செயலெல்லாம் ஏமாற்றமாமாறு அவர் எதிர்பார்த்த பரிசிலை அவன் நல்குவனென எண்ணற்கிடமில்லை யாயிற்று. பெருங்குன்றூர்கிழார்க்கு ஏமாற்றமும் வருத்தமும் பெருகின. அவர், சேரமானை நோக்கி, தோன்றலே! நின்னை நினைந்து நீ தரும் பரிசிலை விரும்பிவந்த பரிசிலருள் யான் ஒருவன். நீ என்னைச் சேர்ந்தார்க்கும், வீரர்க்கும் செய்யும் வள்ளன்மையையும் அன்பையும் கண்டு இவ்வாறு அன்பால் தாழ்ந்து எமக்கும் வண்மை புரிகுவாய் எனக் கருதி, |