340. அள்ளூர் நன்முல்லையார் இவர் பெயர் இப் பாட்டின் குறிப்பில் பள்ளியூர் ஆசிரியர், திரு. கிருட்டினசாமி சேனை நாட்டாரது கையெழுத்துப்படியிற் காணப்பட்டது. புறநானூற்று அச்சுப் படிகளுள் இப்பெயர் காணப்படவில்லை. இப்பாட்டின் சிலவடிகள் சிதைந்து விட்டன. மூதின் முல்லைத் துறைப் பாட்டொன்று இவர் பாடியதாக இத் தொகைநூற்கண் உள்ளதனை (புறம். 304) முன்பே கண்டோம். ஒடகப் பூட்கையையுடைய உரவுவேற் காளை யொருவன் வேந்தனொடு பொருதற்குச் செல்பவன் வெற்றி மேம்பட்டு மீள்வனென்ற துணிபால் அவன் மனைவி நடுகல்லைப் பரவுவதும், பரவுங்கால் தான் விருந்துபெற வேண்டும் எனவும் தன் கணவனும் வேந்துனும் வென்றிபெற வேண்டுமெனவும் கருதுவதும் இவரால் தேனொழுகப் பாடப்பெற்றிருப்பது நம் நினைவுக்கு வருகிறது. அப்பாட்டின் சிதைவு எவ்வாறு நம் உள்ளத்தே வருத்தத்தை யெழுப்பிற்றுறா அவ்வாறே இப் பாட்டின் சிதைவும் பெருவருத்தத்தை எழுப்புகிறது. இப்பாட்டின்கண், மாந்தளிர் புரையும் மேனிநலஞ்சிறந்து இளமக ளொருந்தியைக் கண்ட தலைவனொருவன் அவளை மகட்கொடையாற் பெறக்கருதி அருகிருந்த சான்றோரை நோக்கி அவளுடைய பெற்றோர் திருவும் குடிமையும் பிறவும் கேட்கலுற்றானாக, அவற்கு, இளமைச் செவ்வியும் மாமை நிறமும் உடைய இம் மகள் யார் மகளெனக் கேட்கின்றாய். யான்கூறுவதைக்கேள், இவள் தந்தை இவளைக் கருங்களிறு பெயர்க்கும் கைவேல் மன்னருக்குக் கொடைநேர்தல் வேண்டுமென வரைந்து கொண்டள்ளான் என்று கூறுவதைப் பாடியுள்ளார். | அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக் குரலங் குன்றி கொள்ளு மிளையோள் மாமகள்....................... யார்மகள் கொல்லென வினவுதி கேணீ | 5 | எடுப்பவெடாஅ............ | | ............மைந்தர் தந்தை இரும்பனை யன்ன பெருங்கை யானை கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும் பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே. |
திணையும் துறையுமவை. அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
உரை: அணித் தழை நுடங்க ஓடி - இடையில் அணிந்த அழகிய தழை யுடை யசைய ஓடிச் சென்று; மணிப்பொறிக்குரலம் குன்றி கொள்ளும் - செம்மணிபோல நிகமும் பொறியுமுடைய குன்றிமணிக் கொத்துகளைத் தொகுக்கும்; இளையோள் மாமகள் - இளமைச் செவ்வியும் மாமை நிறத்தையும் உடையவள்; ......யார் மகள் கொல் என வினவுதி...... இவள் யாவர் மகள் என வினவுகின்றாய்! நீ கேள் - யான் கூறுவதனை நீ கேட்பாயாக; எடுப்ப எடாஅ ...... - தன் கையில் படையெடுக்க அதனை நேர்ந்து படையெடாத ......; ......மைந்தர் தந்தை - |