| ......மைந்தர்களுக்குத் தந்தையானவன்; இரும்பனை யன்ன பெருங்கை யானை - கரிய பனைபோன்ற பெரிய கையையுடைய யானைகளை; கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும் - கரந்தைக் கொடி படர்ந்த வயலின்கண்ணே நின்று பொருது வீழ்த்தும்; பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனன் - பெரிய ஆண்டகைமையினையுடைய வேந்தர்கட்கென வரைந்துள்ளான்; எ - று.
குரல், கொத்து, பூவுந்தனிரும் கொண்டு இளமகளிர் தழை தொடுத்துத் தம் இடையில் அணிந்து கொள்வது மரபு. அழகுறத் தொடுத்தமை தோன்ற அணித்தழை யென்றார்; ஆம்புந் தொடலை யணித்தழையல்குல் (புறம். 341) என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. இளைய மகளிரணிவரென்பதை, இளையமாகத் தழையாயினவே (புறம். 248) என்பதனா லறிக. மாநிறமுடைய மகளை மாமகள் என்றார். கரந்தைக் கொடிபடர்ந்த வயலிடத்தே தானைகள் தங்கிப் போர்செய்வதியல்பு. காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல், வந்திறை கொண்டன்று தானை (பதிற். 40) என ஆசிரியார் காப்பியாற்றுக் காப்பியனார் கூறுதல் காண்க.
விளக்கம்: கொத்துக் கொத்தாகக் காய்த்திருக்கும் குன்றிமணிகளைப் பறித்து விளையாடலை விரும்பும் இளமகள் என்றற்கு, குரலங் குன்றி கொள்ளும் இளையோள் என்றார். உருவவும் நலனுங் கண்டு, அவன்பால் தன் கருத்தைச் செலுத்திநின்று வினவுதல் தோன்ற, யார் மகள் கொல்லென வினவுதி யென்று பெயர்த்தும் ஓதினார். இவள் தந்தை பெரிய வேந்தருள்ளும் யானையை வீ்ழ்த்துவெல்லும் பெருவலியுடைய வேந்தர்க்கே இவளை மணஞ் செய்துதர மன்னர் என்றார். யானையைப் பெயர்த்தற் பெருவன்மையே வேந்தர்க்கு அழகும் தகுதியுமாம் என்றறிக. 341. பரணர் மகள் மறுத்தல் காரணமாக இருவரிடையே போர் நிகமும் திறமொன்றை, ஆசிரியர் பரணர் இப் பாட்டின்கட் குறிக்கின்றார். ஒரு தலைவன்பால் அழகிய மகளொருத்தி நலஞ்சிறந்து விளங்கக்கண்ட வேந்தனொருவன் அவளைத் தனக்கு மகட்கொடை நேருமாறு வேண்டினான். தலைவனாகிய தந்தை மகட்கொடை மறுத்தான். வேந்தன் தன் வேட்கை மிகுதியால் அவனை இரந்து பின்னின்று குறைமொழிந்து கேட்டான். அதற்கும் அத்தந்தை கொடுத்தற்கு இசையவில்லை. வேந்தற்கு வெகுளி பெரிதாயிற்று. இருவர்க்கும் போர்மூண்டது. தந்தை தன் தானை மறவரைப் போர்க்குரியராமாறு பணித்து அவரவரும் பேர்ந்து போர்ப்பூப் பெற்றுக் கொள்ளுமாறு ஏவிவிட்டுத் தானும் போர்க்குச் செல்வான் நீர்நிலைக்கு நீராடச் சென்றான். வேந்தனும் இவ்வாறே தன் தானை மறவரைப் பணித்து மிக்க சினத்துடனே நாளை இம் மாமகளை மணம் புணரும் நாளாதல் ஒன்று; விழுப்புண்பட்டு மேம்படு வடுவுடன் விண்ணுலகு புகும் நாளாதல் ஒன்று; இரண்டினுள் ஒன்று நிகழ்தல் வேண்டுமென வஞ்சினம் மொழிந்து வாளைக் கையிற் கொண்டான். இவர் இவ்வகையராதலால். இவ்வூர் தனதுபேரழகை இழந்தழியும்போலும் என ஆசிரியர் பரணர் இரங்கிப் பாடுகின்றார். |