| மருதமேறி (பதிற். 27) என்றும். மருதிமிழ்ந் தோங்கிய பெருந்துறை (பதிற். 23) என்றும் சான்றோர் விளம்புதல் காண்க. நிறுக்கப் படும் பொன்னும் பொருளும் அடங்க நிறைசால் விழுப்பொருள் என்றார். பெண்ணின் நிறையளவு பொன்னும் நிறுத்துத் தரப்படும் என அறிக; பண்பில் ஆண்மையாவது, மக்கட் பண்பாகிய அருளும் அறமும் இன்றிக் கொலை விலங்குபோல உயிர்க்கட்குத் தீமை தருவது. இஃது இழித்தக்கதாயினும் மேற்கொண்டு செய்யப்டுமென்பார், பண்பிலாண்மை தருதல் ஒன்றோ என்றார; ஒரு மகளைக் கொள்வோன், அவளுடைய தந்தை தன்னையரைக் கொன்று, அவள் பிறந்த வூரையும் மனையையும் தீக்கிரையாக்கிக் கோடல் பெரியதொரு பண்பில் செயலாதலின், அதனைத் தனக்கு ஆண்மையாக மேற்கொண்டு செய்தல், பண்பிலாண்மையாதல் காண்க. ஆர், ஆத்தி; அஃது அம்முப் பெற்று ஆரம் என வந்தது. முலை முற்றத்தணிந்த சந்தனக்குழம்பு புலர்வது குறித்து வேங்கையின் நுண்ணிய தாதினை அப்பிக்கொள்வதில் இளமகளிர்க்கு விருப்பு மிகுதியாதல்பற்றி, வேங்கை மேவந்தவள் என்றார். வேங்கை மரத்திலிருந்து பூப்பறித்து விளையாடும் விருப்பமுடைமை தோன்ற இவ்வாறு கூறினாரெனினுமையும். மேவருதல், விரும்புதல்; முறி - தளிர்.
விளக்கம்: செறிவளை மகளிர், மனையுறையும் பெண்டிர், இவர்கள் தாம் உணக்கிய நெல்லை மயில் கவர்ந்துண்ணுமிடத்து அதனைக் கடிவர்; அக்காலை மயில் பறந்து சென்ற நீர்த்துறையிடத்து நிற்கும் மருதமரத்தில் தங்கும் என்றது, அவ்வூரிடத்து இளமகளிரை விரும்பும் இளையர் கொண்டுதலைக்கழிதல் முதலிய களவுத்துறையில் ஈடுபடவியலாவண்ணம் காவல் மிக வுடையரென்று கூறியவாறாம். ஆகவே அவர்கள் விழுப்பொருள் தருவதோ; அன்றி பண்பிலாண்மை தருவதோ இரண்டினுள் ஒன்றைச் செய்தலல்லது விரும்பும் மகளிரைப் பெறலாகாதென்பது வலியுறுத்தப் பட்டது. செந்நெல் பைந்தோடு உண்ட மஞ்ஞை யென மாறியியைத் துரைப்பினும் அமையும். அகன்ற அல்குலிடத்து வரிபரந்திருத்தல் அழகு. அதனாற்றான், அல்குல் அவ்விரி யென்றார. அல்குல், இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதியாகும். 345. அண்டர் நடுங்கல்லினார் மறக்குடித் தலைவன் ஒருவன் மகள் திருமணத்துக்குரிய செவ்வி யெய்தியிருந்தாளாக, அவளை நயந்து மகட்கொடை வேண்டிச் சீறூர் வேந்தரும் பேரூர் வேந்தருமாகிய பலர் அவள் தந்தைபால் வந்தனர். அவர்களை நிரலல் லோர்க்குர் தரலோ இல் என்று கூறி மறுத்தான். அவள் தந்தை உற்றார்க்கு ரியர் பொற்றொடி மகளிர் என்பது கொண்டு யாவரேனும் ஒருவர்க்கு மகட்கொடை நேரச் சமைந்தானாயினும், அவளுடைய தன்னையர் மகள் வேண்டி வந்தோரது நிரலுடைமையைக் கூர்ந்து நோக்கும் குறிக்கோள்கொண்டு மகட்கொடை மறுத்தலில் முற்பட்டிருந்தனர். மகட்கொடை வேண்டி வந்தோர் பெரும் பொருள் நல்குவதாகக் கூறியவழியும் நிரலுடைமை நோக்கி மறுப்பதே அத் தன்னையர் செய்தனர். இது கண்டார் சான்றோராகிய அண்டர் நடுங்கல்லினார். வந்த வேந்தர்களின் பெருமையும் தன்னையரின் தறு கண்மையும் இவர்களாற் போர் நிகழ்ந்தவழி அவ்வூர்க்குள தாகும் தீமையும் தூக்கி நோக்கி இப் பாட்டால் இரங்கிக் கூறகின்றார். |