| சின்மீன் சீவும் பாண் சேரி - சிலவாகிய சிறுமீன்களைப் பிடித்துண்ணும் பாண் சேரியுமுடைய; வாய்மொழித் தழும்பன் ஊணூரன்ன - தப்பாத மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப்போன்ற; குவளை யுண்கண் இவளை - குவளைப் பூப்போலும் கண்களையுடைய இம் மகளை; தாய் ஈனாளாயின ளாயின் - தாய் பெறாதொழிந்திருப்பாளாயின்; ஆனாது - அமையாமல்; நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப - மரநிழல் தோறும் நெடிய தேர்கள் நிற்க; வயின்தொறும் - இடந்தோறும், செந்நுதல் யானை பிணிப்ப - சிவந்த நுதலையுடைய யானைகளைக் கட்டுதலால்; எம் பெருந்துறை மரம் வருந்தினமன் - எம்மூர்ப் பெருந்துறைக் கணின்ற மரங்கள் வேர் துளங்கிப் பெரிதும் கெட்டன; எ - று.
நெற்கதிர் முற்றிய வயலில் பல்வகைப் புள்ளினங்கள் கூடு கட்டி வாழுமாதலின், அறுவடைக்காலத்தில் அவை ஊறின்றி நீங்குதல் குறித்து நெல்லரியுந் தொழுவர் தொடக்கத்தே தண்ணுமை இசைப்பது பண்டை மரபு. வயலருகே நின்ற தெங்கு முதலிய மரங்களின் மடலிற் கட்டிய அதன் கூட்டினின்றும் தேனீக்கள் தண்ணுமையோசை கேட்டஞ்சி நீங்கிவிடுதலால், ஆங்கு வாழும் குயவர் தேனடையைக் கைக்கொண்டு இனிய தேனை வடித்துக்கொள்வர் என்பதுபட, கண் மடற் கொண்ட தீந் தேன் இரியக் குயம் கள்ளரிக்கும் என்றார், அரித்தல், வடித்தல். சேரியைக் குயத்துக்குங் கூட்டுக. குயவர் சேரி குயம் எனப்பட்டது. வேட்கோவருட் சிறந்தோர்க்குப் பெருங்குயம் என்று சிறப்பித்தல் இடைக் காலத்தும் தமிழகத்து வழக்காக இருந்தது. சிறு வலை கொண்டு மீன் பிடிக்குஞ் செயலை மீன் சீவுதல் என்றார்.மன். பெருமை. இனி இதனை ஒழியிசையாக்கி, ஆனாதுமு மன் எனக் கூட்டி, ஈனாளாயினளாயின் ஆனாது மன்னென்று கொண்டு ஈனா தொழிந்திருப்பளேல் இந்நிலை வந்து அமையாது; அது கழிந்தது என வுரைப்பினும் அமையும்.
விளக்கம்: வெண்ணெல் அரிபவர், அரியப் புகுமுன் தண்ணுமை முழக்கி நெல் வயலில் வாழும் புள்ளினங்களை ஒப்புவரென்பதைச் சான்றோர் வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள்ளிரிய(நற். 350) எனவும், வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்பும், தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை (அகம். 40) எனவும், வெண்ணெ லரிநர் படிவாய்த் தண்ணுமை, பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ளோப்பும் (அகம். 204) எனவும் கூறுவது காண்க. தழும்பனுடைய ஊணூர் மருங்கூர்ப்பட்டினத்துக்கு அண்மையில் இருப்பதென நக்கீரர் (அகம். 227) கூறுகின்றார். வேட்கோவருட் சிறந்தோர்க்குப் பெருங்குயம் என்று பட்டந் தந்து சிறப்பிப்பதை, இலாவா ணகவழிச் சாதக னென்னும், குலாலற்கேற்பப் பெருங்குய மருளி (பெருங். 4; 9:47-8) என்று கொங்குவேளிர் கூறுவது காண்க. ஈன்று வளர்த்துவிட்டமையின், ஈனாளாயிளைாயின் என்றார். |