| பிறந்த வூர்க்கு வருத்தம் விளைவிப்பவ ளாயினாள் என்பதல்லது வேறி்ல்லை, எ - று.
மகட்கொடை மறுக்கவே, வேந்தன் உள்ளத்தில் மகள் பாற் கொண்ட காதல் முற்றம் பகைமையாய் முறுகிவிட்டமையின் மேற் செயற்பாலும் போரே எனத் துணிந்த செயலும் சினந்த சொல்லு முடையனானான் என்பது தோன்ற, நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் என்றார். தந்தையும் அஞ்சாநெஞ்சினனாதல் விளங்க தந்தையும் நெடியவல்லது பணிந்து மொழியலன் என்றார். படிவம், கொள்கை. மரக்கட்டையைக் கடைந்தவழிப் பிறக்கும் தீ, தான் தோன்றும் மரமே எரிந்து கெடுதற்குக் காரணமாவதுபோல், இவள் தான் பிறந்தவூர் கெட்டு வருந்துதற்குக் காரணமாயினன் என்பார், மரம்படு சிறுதீப் போல, அணங்காயினன் தான் பிறந்த வூர்க் கென்றார். வேந்து, துடையா கூறும்; தந்தையும் மொழியலன்; இவர் படிவம் இஃது; ஆயின், இவன் தீப்போல ஊர்க்கு அணங்காயினள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: மகட்கொடை மறுக்கப்பட்டவழி, மறுக்கப்பட்டவனும் மறுத்தவனுமாகிய இருதிறத்தாரும் போர் செய்தற்குச் சமைந்தது கண்ட மருதன் இளநாகனார் இப் பாட்டைப் பாடுகின்றார்; மகட்கொடை விழைந்த வேந்தன் உள்ளத்தில் நிலவிய விழைவு முற்றும் வெகுளியாய்ப் போர்க்கண் அவனைச் செலுத்திற்று; கொடைபுரிதற்குரிய தந்தை கொள்ளிற்குரிய அமைதி விழைந்த வேந்தன்பால் இல்லாமை கண்டு மறுத்து, மறுக்கப்பட்ட வேந்தன் போர்க்கெழுதலை யறிந்து சினங்கொண்டு போர்க்குச் சமைவானாயினன். தந்தையும் நெடியவல்லது பணிந்து மொழியலன் என்றதனால், மகட்கொடை மறுப்பவன் வேந்தனல்லன் என்றும், வேந்தன் மகட்கொடை நல்கும் மாண்புடைய குடியினனாதலால், அதற்கேற்ப, நெடிய மொழிதல் அவற்கு இயல்பாயிற்று. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முது குடி, மகட் பாடஞ்சிய மகட்பாற் காஞ்சி (தொல். புறத். 24) என்பதற்கு இதனைக் காட்டிய இளம்பூரணர், இது பெருஞ்சிக்கல் கிழான் மகட் கொடை மறுத்தது என்பர். 350. மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தா ராயத்தனார் மேலைக்கடைய மென்பது தென்பாண்டி நாட்டிலுள்ளதோரூர். இவ்வூர் நல்லிசைச் சான்றோர் பலர் பிறந்த சிறப்புடையது. கடையம் என்பது குறைந்து கடையெனச் சுருங்கிற்று. இப்போதுள்ள மேற் கடையம் கீழ்க்கடையம் என்ற வூர்கள் இடைக் காலத்தே கோனாட்டு விக்கிரம பாண்டிய நல்லூரான கடையம் (A. R. No. 522 of 1916) என்றும் கோனாட்டுக் கடையம் (A. R. No. 525 of 1916) என்றும் வழங்கியதைக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். மேலைக்கடையத்தார் எனற்பாலது மதுரையோலைக்கடையத்தார் என ஏடெழுதினோரால் பிழைக்கப் பட்டுள்ளது. இக் கடையத்தைச் சார்ந்த ஒரு குடியினர் மதுரையிற்றங்கியிருந்தமையின் அவர் மதுரை மேலைக் கடையத்தாரென வழங்கப் பட்டனர். மதுரை மேலைக் கடையத்தாரான நல்வெள்ளையார் என்ற சான்றோரொருவர் நற்றிணை பாடிய ஆசிரியன்மார்களுள் ஒருவராகக் காணப்படுகின்றார். மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் |