354. பரணர் மகள் மறுத்தது காரணமாக ஒரூர்த் தலைவன்மகள்வேண்டி வந்து மறுக்கப்பட்ட ஏனைத்தலைவரொடு போர்செய் வேண்டிய நிலை எய்திற்று. அதனால் அவன் தனக்குரிய தானை மறவருடன் தன் வேலை நீர்ப்படை செய்தலாகிய மண்ணுமங்கலத்தைச் செய்யலுற்றான். இதனையறிந்த ஆசிரியர் பரணர், மணத்திற்குரிய இந்த மடந்தையின் நோக்கம் இவ்வூர்க்கு நலஞ் செய்ததேயன்றி, கேடு உண்டாதற்கும் ஏதுவாயமையும் போலும் என வியந்து வருந்திய இப் பாட்டினைப் பாடியுள்ளார். | அரைசுதலை வரினு மடங்க லானா நிரைகா ழெஃக நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும் வயலமர் கழனி வாயிற் பொய்கைக் | 5 | கயலார் நாரை யுகைத்த வாளை | | புனலாடு மகளிர் வளமனை யொய்யும் ஊர்கவி னிழப்பவும் வருவது கொல்லோ சுணங்கணிந்தெழிலிய வணந்தேந் திளமுலை வீங்கிறைப் பணைத்தோண் மடந்தை | 10 | மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே. |
திணையும் துறையு மவை. பரணர் பாடியது.
உரை:அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா - முடிவேந்தர் நேர் நின்று பொர வரினும் அடங்குதலமையாத; நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்க - நிரைத்த காம்பணிந்த வேலை நீர்ப்படை செய்தற்பொருட்டு; புரையோர் சேர்ந்தென - சான்றோர்களாகிய உயர்நத் வீரர்கள் வந்து கொக்கனராக; தந்தையும் பெயர்க்கும் - தந்தையாகிய தலைவன் நீர்நிலைக்குச் செல்ல விடுக்கின்றான்; வயலமர் கழனி வாயிற் பொய்கை - வயல்கள் பொருந்திய கழனி கட்கு வாயிலாகிய பொய்கைக்கண்; கயலார் நாரை உகைத்த வாளை - களல்மீனன யுண்ணும் நாரையால் துரத்தப்பட்ட வாளைமீனை; புனலாடு மகளிர் வளமனை ஓய்யும் நீரில் விளையாட்டயரும் மகளிர் பிடித்துத் தம் வளவிய மனைக்குக் கொண்டுசெல்லும்; ஊர் கவினிழப்பவும் - ஊர் தன் பொலிவிழந்து கெடவும்; வருவது கொல் - வரும் போலும்; சுணங் கணிந்து எழிலிய அணந்து ஏந்து இளமுலை - தேமல் பரந்து உயர்ந்த அண்ணாந்து நிற்கும் இளமுலையும்; வீங்கு இறைப் பணைத் தோள் - பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலுந் தோளையுமுடைய, மடந்தை மான் பிணையன்ன மகிழ்மட நோக்கு - மடந்தையது பிணைமான்போலும் மருண்டமடவியநோக்கம்; எ - று. |