| திருமகள் கைவிட்டு நீங்குவள்; ஆதலால் தவமே செயற்பாலதென்று வற்புறுத்தியுள்ளார். | பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவழுந் தூக்கிற் றவத்துக் கையலி யனைத்து மாற்றா தாகலிற் | 5. | கைவிட்டனரே காதல ரதனால் | | விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே. |
திணை: அது. துறை: மனையறம் துறவற. வான்மீகியார் பாடியது.
உரை: பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் - ஞாயிற்றால் வலமாகச் சுற்றப்படும் இப் பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்; ஒரு பகல் எழுவர் எய்தியற்று - ஒருநாளில் எழுவரைத் தலைவராகக் கொண்டாற்போலும் தன்மைத்து; வையமும் தவமுத் தூக்கின் - உலகியலாகிய இல்லறத்தையும் தன் வாழ்வாகிய துறவறத்தையும் சீர் தூக்கினால்; தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது - தவத்துக்கு வையம் சிறு கடுகவவும் நேர்படாதாம்; ஆகலின் - ஆதலால், காதலர் கைவிட்டனர் வீடு காதலித்தோர் இல்வாழ்விற் பற்றுவிட்டனர்; திரு விட்டோரை விடான் - திருமகள் தன்பாற் பற்றுவிட்டோரை நீங்காள்; இவள் விடப்பட்டோர் - இத் திருமகளால் விடப்படடோர்; விடார் - இல்வாழ்விற் பற்றுவிடாது அதனுள் - அழுந்தி வருந்துவர் எ - று.
பருதியாற் சூழ்வரப்பட்டது நிலம் என்றாராயினும் நிலத்தாற் சூழ்வரப்பட்டது பருதி யென்பது கருத்தாகக் கொள்க. எழுவார் தலைவராகிய வழி, அவர் கீழ் வாழ்வோர்க்கு ஒருகாலும் இன்பமில்லையாம்; இன்பம் போலத் தோன்றுவதெல்லாம் துன்ப மேயாதலின் ஒரு பகல் எழுவரெய்தியற்று என்றார். எழுவர் என்பது பலர் என்னும் பொருள்பட நின்றது. இல்வாழ்க்கை உற்ற நோய் பொறாது வருந்துதலும் உயிர்க்கு உறுகண் செய்தாரை முறையும் மானமுங் கருதி வருத்துதலு முடைமையின் தவத்துக்குச் சிறிதுமாற்றாதெனப் பட்டது. தன்பாற் பற்று வைத்தார் கடும் பற்றுள்ள முடையராய் அறஞ்செய்தலும் இன்ப நுகர்தலுமின்றித் திருவுடைமைக் கேதுவாகிய அறப்பயனை யிழத்தலின், விடாதோர் இவள் விடப்பட்டோர் என்றார். இலர்பல ராகிய காரணம் நோற்பார், சிலர் பலர் நோலாதவர் (குறள். 270) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.
விளக்கம்: இந்தப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் வான்மீகையாரெனவும் காணப்படுகிறது. வான்மீகையாரென்பது உண்மைப் பாடமாயின், இது செந்தமிழ்ச் சான்றோரொருவது தமிழியற் பெயராய் வட வான்மீகியாரோடு தொடர்பு யாதும் இல்லதாம். |