| உரை: நுங் கோ யார் என் வினவின் - உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின்; எங் கோ - எம் முடைய இறைவன்; களமர்க்கு அரித்த விளையல் வெங்கள் - களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை; யாமைப் புழுக்கின் - ஆமையிறைச்சியுடனே; காமம் வீடஆரா - வேட்கைதீர அக்களமர் உண்டு; ஆரல் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ - ஆரல் மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தே அடக்கி; வைகு தொழில் மடியும் மடியா விழவின் - மதுவுண்ட மயக்கத்தால் வைகு தொழிலொழியும் நீங்காத விழவினையுடைய; யாணர் நல் நாட்டுள்ளும் - புதுவருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும்; பாணர் பைதற் சுற்றத்துப் பசிப் பகையாகி - பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய்; கோழியோன்- உறையூரென்னும் படைவீட்டிடத் திருந்தான்; கோப்பெருஞ் சோழன் -; பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ - புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி; வாயார் பெருநகை வைகலும் நக்கு - மெய்ம்மையார்ந்த மிக்க மகிழ்ச்சியை நாடொறும் மகிழ்ந்து; எ - று.
நன்னாட்டுள்ளும் என்ற உம்மை சிறப்பும்மை. கோழி - உறையூர்.
நுங்கோயாரென வினவின் எங்கோக் கோப்பெருஞ்சோழன்: அவன் பசிப்பகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத் திருந்தா னெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆகிக் கெழீஇ நக்கென்னும் செய்தெனெச்சங்களைக் கோழியோ என்னும் வினைக்குறிப் போடு முடிக்க.
விளக்கம்: களமர் பொருட்டு வடித்தெடுக்கப்பட்ட அரியலை அக்களமரேயுண்பர். அரியலாகிய கள்ளை வெறிக்க வுண்பரென்பதற்கு, காமம் வீட ஆரா என்றார். ஆர்தல் - உண்டல். கள்ளுண்ட மயக்கத் தால் விளைவது தொழிலில் ஈடுபடாது மடிவது. விழவுதோன்றி, கள்ளுண்ட களமரைத் தன்பால் ஈடுபடச் செய்வது விளங்க, வைகு தொழில் மடியும் மடியாவிழவு என்றார். பசியால் வாடியிருக்கும் சுற்றமென்பது தோன்றப் பைதற் சுற்றம் என்பது குறிக்கப்பட்டது. உறையூர்க்குக் கோழி யென்றும் பெயருண்டு. கோழியென்றது, ஒரு கோழி நிலமுக்கியத்தால் யானையோடு பொருது, அதனைப் போர் தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த நகர்க்குப் பெயராயிற்று; முறஞ்செவி வாரணமுன்சம முருக்கிய, புறஞ்சிறை வாரணம் (சிலப். 10: 247-8) என்பர் மேலும் என்று அடியார்க்கு நல்லார் கூறுவது காண்க. பொத்து, புரைபடுதல்; பலர் நின்று போற்றினும் பொத்துப் படும் (குறள். 468) என வருதல் காண்க. ஈண்டுப் புரைபடுவதாவது அறைபோகுதல். புரையில்லாத நல்லமைச்சரோடு கூடியிருக்கும் வேந்தனுக்கு மெய்ம்மையின்பம் ஒருதலையாதலின், வாயார் பெருநகை என்று வியந்தோதினார். கோழியோன் என்பது கோழியின் கண் உள்ளன் என்பதுபட நிற்றலின், கோழியிடத் திருந்தானெனக் கூட்டி வினைமுடிவு செய்க என்று உரைத்தார். பெருநகை யென்ற விடத்துப் பெருமை மிகுதி குறித்துநின்றது. செய்தெனெச்சங்கள் வினைக்குறிப்போடு முடியலாம்; |