| வழங்குவது இதற்குப் போதிய சான்றாகும். கோதமனார் இவனுக்கு உரைக்கு அறவுரையை நோக்கின் இவன் மிக்க இளையனென்பது விளங்கும். பகலின் ஆள்வினைக்குதவலும் இரவில் வருவது நாடலும்செய்க என்ற வழி. அவன் உள்ளம் மறநெறியே செல்லுமென்று கொண்டு, மறமொன்றே யன்று இவ்வுலக வாழ்வுக்கு வேண்டுவது, அறமும் செய்தல் வேண்டுமென்பார், தேறல் மகளிரோடு உண்டு மடைவேண்டுநர்க்கும் அவிழ் வேண்டுநர்க்கும் நிரம்பத் தந்து உண்பித்து நீயும்உண்டு அன்புடையனாகுக என்றார். வெறிக்களத்துத் தொகுக்கப் பட்ட விடைகள் வீழ்தல் ஒரு தலையாதல் போல இவ்வுலகிடைத் தொக்க வுயிர்கள் இறப்பது ஒருதலை யென்பதாம். உழவொழி பெரும்பகடு அழிதின்றாங்கு என்றது, தனக்கென வாழாப் பிறர்க் குரியாளனாய் வாழ்க என்றவாறு. 367. ஒளவையார் சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒரு காலத்தே சேரமான் மாரிவெண்கோவென்றலும் பாடம். இச் சேரமான் சேரமான்களுட் காலத்தாற் பிற்பட்டவனாகக் கருதப்படுகின்றான். அவரிையே வேறுபடுதற்கேதுவாகிய பகைமையில்லை. தமிழகம் இம் மூவர்க்கும் பொதுவாக உரியதென்பது தொன்று தொட்டுவரும் கொள்கை. இக்கருத்தே தோன்றச்சான்றோர் குன்று தலை மணந்த மலைபிணித்து யாத்தமண், பொதுமை சுட்டிய மூவருலகமும் (புறம். 357) என்று வற்புறுத்தியிருப்பது காண்க. இவர் தம்முட் பகைத்துப் பொருது கெடுவரேல், வேறு நாட்டவர் புகுந்து தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழியற் பண்பாட்டைச் சிதைத்துத் தமிழ்நாட்டுச் செல்வம், கலை, சமயம், மொழி, ஒழுக்கம் முதலியவற்றைச் சிதைத்தழிப்பரென்று சான்றோர் முன்னரே யறிந்திருந்தனர். அதனால் அச் சான்றோர், வேந்தர் மூவரும் அன்பால் ஒருங்கு கூடியிருக்கும் செவ்வி காணும் போதெல்லாம் ஒன்றிய வாழ்வின் வென்றிநலத்தை எடுத்தோதிச் சிறப்பிப்பர். அவ் வழியில் வந்த சான்றோராகிய ஒளவையார் வேந்தர் மூவரும் ஒருங்கிருப்பக் கண்டதும், பெருமகிழ்வுகொண்டு, வேந்தர்களே! நிலவுலகம் வேந்தர்க்குரித்தாயினும், அவர் இறந்துபோங்கால், உலகமும் உடன் போவதில்லை; அரசியற் பேற்றுக்குரிய நோன்மையுடையோர் வேற்று நாட்டவரேயாயினும், அவர்க்கு உரியதாய்ச் சென்றொழியும்; ஆதலால், அரசியலை அறநெறியிற் செலுத்திப் பொருளீட்டு இரவலர்க்கு வழங்கி உங்கள் வாழ்நாள் முற்றும் இன்பமுறவாழ்வீர்களாக. உங்களை வாழச் செய்த நல்வினையே உங்கள் இறுதிக்காலத்தில் உயிர்த் துணையாகும். ஆதலின், அந் நல்வினையையே செய்வீர்களாக. யான் அறிந்த அளவு இதுவே. நீவிர் வானிற்றோன்றும் மீனினும் மழைத்துளியினும் பல காலம் வாழ்வீர்களாக என்று இப் பாட்டால் அறிவுறுத்தினார். இவ்வாறு சான்றோர் பலர் மூவேந்தரும் ஒருமை மனத்தவராய் வாழ வேண்டுமென வற்புறுத்தியிருப்பவும், அவர் அவ்வன்புறையை மறந்து பொருது கெட்டனர்; கெடவே, வடநாட்டு வடவரும், களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரம், துருக்கரும் மேலைநாட்டு வெள்ளையருமாகப் பலர் புகுந்து தமிழகத்து அரசியல், சமயம், மொழி, பொருணிலை, சமுதாயம் முதலியவாழ்க்கைக் கூறுகளையழித்துத் தமிழர் என்றும் பிறர்க்கே யுழைத்து ஏழையாகும் இழி நிலையை யுண்டாக்கி விட்டனர். |