| இரவலர்க்கு அவர் வேண்டிய அரிய பொருள்களைக் குறைவறக் கொடுத்து; இவண் வரைந்த வைகல் வாழ்தல் வேண்டும் - இவ்வுலகில் வாழ்தற்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் நன்றாக வாழ்தலே வேண்டுவது; வாழச் செய்த நல்வினை யல்லது - வாழ்தற்கேதுவாகிய அந் நல்வினையின்றி; ஆழுங் காலைப் புணை பிறிது ல்லை - இறக்கும்போது உயிர்க்குத் துணையாவது வேறே யாதும் இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீயுரைய - வீடுபேறொன்றையே விரும்பிப் புலன்கண்மேற் செல்லுகின்ற ஆசைகளை யடக்கியமைந்த அந்தணர் எடுக்கும் முத்தீயைப்போல; காண்தக இருந்த - அழகுதக வீற்றிருந்த; கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் - வெண்கொற்றக் குடையும் கொடி யுயர்த்திய தேருமுடைய வேந்தர்களே! யான் அறி அளவை இதுவே - யானறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்; வானத்து வயங்கித் தோன்றும் மீனினும் - வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்களிலும்; இம்மென இயங்கும் மாமழை உறையினும் - இம்மென்று முழங்கி்ப் பெய்யும் பெரிய மழைத்துளியினும்; உயர்ந்து மேந் தோன்றி மிக்கு - மேம்பட்டு; நும் நாள் பொலிக - நும்முடைய வாழ்நாட்கள் விளங்குவனவாக; எ - று.
நாகம், இன்பமே தேவருலகம். பாகு - பகுதி. மண்டிலம் வட்டம்; ஈண்டுச் சேரமண்டலம், சோழமண்டலம் மென்றாற்போல நாட்டின்மேல் நின்றது. வேற்றோர் தமிழரல்லாத பிறர். நோன்றல், நோன்மையாதலின், அதனை யுரையாரை நோற்றோரென்றார். 2தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் என்பதுபற்றி, அரசவாழ்வாகிய செல்வப் பேற்றுக் கேதுவாகிய நோன்மை குறிக்கப்பட்டது. வலிய போர்ப்படை யேந்திப் போருடற்றும் பண்பினரல்லராகலின், பார்ப்பார் கை உண்டற்றொழி லொன்றிற்கே பயன்பட்டமை தோன்ற ஈர்ங்கை யென்றார். பூ, பொன்னாற்செய்த பூ; பார்ப்பார் இதனைச் சொர்ண புட்பம் என்பர். பார்ப்பார் என்போர் ஓதல் ஓதுவித்தல் முதலிய அறுதொழிலைச் செய்யும் வேதியராவர். அந்தணரென்போர், பார்ப்பார், அரசர் வணிகர், வேளாளரென வரும் பலருள் அருளறம் மேற்கொண்டு முற்றத் துறந்த துறவிகளாவர். மகிழ வுண்டு பெருகக் கொடுத்துப் புகழுண்டாக வாழ்தலே வாழ்வு; ஈதலும் இசைபடவாழ்தலும் வாழ்வின் ஊதியமென்பது தமிழரறம். எத்திறத் தோர்க்கும் வரைந்த வாழ்நாள் எல்லைகடவாதாகலின் வரைந்தவைகல் என்றார். ஒன்று - வீடு பேறு. சுவை முதலாகிய புலன்கண்மேற் சென்ற ஆசையால் நுகரப்படுவது உலகியலின்பமாய்க் கருதும் வீடு பேற்றுக்குமாறு படுதலின், வீடு காதலிப்பவரால் ஆசையாகிய உலகியலின்பம்விடப்படு மென்பதுபற்றி, ஒன்றுபுரிந் தடங்கிய இருபிறப்பாளர் என்றார். இரண்டாவது பிறப்பும் வீடுபேறு குறித்ததென்றுணர்க. தமிழ் வேந்தர் மூவருக்கும் முத்தீ உவமம். சொரிதலும் உண்டலும் ஈதலும் புகழை நிறுவி நாட்டு மக்களை அன்பால் பிணிப்பித்து வலிமிகச் செய்தலின் வேந்தர் இவற்றைச் செய்து வாழவேண்டு மென்றார். வேந்தீர், மண்டிலம் செல்லா ஒளியும்; சொரிந்து சிறந்து வீசி வாழ்தல் வேண்டும்; இல்லை; மீனினும் |