| நெடுஞ்சேரலாதன் பொருது வீழ்ந்த போர்க்களத்தில் இரு வேந்தரும் வீழ்ந்தமையின், இரவலர் அக் களிறு முதலியன பெறாது வருந்தினமை தோன்ற, முகவை இன்மையின் உகவை யின்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களம் என்று குறித்தார். தன்னைக் காண்டற்கு வந்த கழாத்தலையார் காணத் தன் கழுத்திடத்துக் கிடந்த ஆரத்தைச் சேரலாதன் கோடியர்க்கு நல்கினானாக, இறுதிக் காலையினும் கொடைநலம் குன்றாத அவனது வள்ளன்மையை வியந்து கூறலுற்றவர், கோடியர் பாடிவந்தது ஆரம் முகக்குவம் எனவே என்றார்; எனவே, இரப்போர்இரங்கும் வியன் களத்துடக கோடியர் நின் ஆரம் பெற்றனர்; யான் நின் புகழ் பாடும் பேறு பெற்றேன் எனக் குறிப்பெச்சத்தாற் பெறவைத்தார். வேறலும் தொலைதலும் ஒருவர் பாங்கல்லவாதலால் தோற்றோர் வருந்தாரென்பதும், இரவலரே தாம் பெறற்கு இன்மை கண்டு வருந்துவாரென்பதும் விளங்க இருவரும் வீழ்ந்த போர்க்களம் இன்னா வியன் களம் எனப்பட்டதென்க. 369. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் சேரமன்னருள், குட்டுவர், குடவர், இரம்பபொறையர் எனப் பலர் பலவேறு காலங்களில் சேரநாட்டு முடிவேந்தராய் விளங்கினர். அவருள் வேல்கெழுகுட்டுவன் ஒருவன். சேரவேந்தர் மேலைக்கடற்கரை நாட்டிலிருந்து கடற்படைகொண்டு வேறு நாடுகட்குச் சென்று வாணிகம் செய்தலில் மேம்பட்டிருந்தனர். இவருடைய கடற்படையின் வன்மை நாடெங்கும் பரந்திருந்தது. சேரர்களது வங்கம் கடலிற் செல்லுமாயின் ஏனை நாட்டவர் தத்தம் வங்கங்களைத்தம் கரையில் நிறுத்திக் கொள்வரே யன்றிக் கடலிற் கலஞ் செலுத்துதற்கஞ்சுவர். சினமிகுதானை வானவன் குடகடற், பொலந்தரு நாவாயோட்டிய வவ்வழிப், பிறர்கலஞ் செல்கலா (புறம். 126) தென்று மாறோக்கத்து நப்பசலையார் கூறுவது காண்க. இவ் வண்ணம் செந்தமிழ்ப் பெருவேந்தர் கடற்படையால் உலகுபுகழும் உயர்வுற்றிருந்தபோது வேறுநாட்டவர் கடலில் கலஞ் செலுத்திக் குறும்புசெய்து வந்தனர். அவர்தம் குறும்பு மிகுவது கண்டவேல்கெழு குட்டுவன், கடற்படை ஒன்று கொண்டு சென்று அவரை வென்று வேரறுத்து வாகை சூடினான். அன்று முதல் அவனுக்குச் சேரமான் கடலோட்டிய வேல்கெழுகுட்டுவன் என்ற சிறப்புண்டாயிற்று. இக் குட்டுவனைச் செங்குட்டுவன் என்றும் கூறுவர். இப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பரணரால் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்திற் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் பாராட்டிக் கூறப்பட்டுளன். பரணர் காலத்துப் கடல்பிறக் கோட்டிய குட்டுவன் செங்குட்டுவனென்றும், வேல்கெழுகுட்டுவனென்றும் நூல்களிற் கூறப்படுவதனால் இருவரும் ஒருவராதல் தெளிவாம். இப் பாட்டு ஆசிரியர் பரணர் குட்டுவன் கடல் பிறக்கோட்டும் செயல்செய்தற்கு முன்னர் அவனைப் பாடியது. பின்னர்ப் பாடிய பாட்டுக்களான பதிற்றுப்பத்து இச் செய்தியைச் சிறப்பாகக் குறிக்கின்றன.
இதன்கண், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மேகமும், அது கருத்து மழை பெய்யுங்காலத்துச் செய்யும் மின்னலும், உடன் தோன்றும் இடிமுழக்கமும், மின்னியிடித்து மழை பெய்யுங்கால் நாற்றிசையும் பரவிப் பொழியுமாறு வீசும்வளியும், இவற்றால் ஈரங் கொண்ட நிலமும், அதனை யுழுதற்கு வேண்டும் ஏரும், உழுதவழி யுண்டாகும் படைச்சாலும், அதன்கண் |