| வினைப்பெயர். பீடுடையாள, பெரும, தடாரி ஒற்றிப் பாடி வந்திசின், வெய்யோய், குழவிய பிடியிடைமிடைந்த வேழமுகவை நல்குமதி என்று கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: மறக்கள வழியாவது, முழவுறழ் திணிதோளானை உழவனாக வுரைமலிந்தன்று, (பு. வெ. மா. 85) என வரும். இனி கூதிர் வேனில்(தொல். புறத். 17) என்ற சூத்திரத்து, ஏரோர் களவழி யன்றிக் களவழித், தேரோர் தோற்றிய வென்றியும் என்ற தன் உரையில் இதனை யெடுத்துக்காட்டி இஃது ஏரோர் களத்தின் வழி கூறியது என்பர் இளம்பூரணர். இப்பகுதிக்கு நச்சினார்க்கினியர். நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச்சுற்றத்தொடுநுகர்வதற்கு முன்னே கடவுட்பலி கொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல, அரசனும், நாற்படையையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாள்மட லோச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ‘ஈனா வேண்மான் இடந்துழந்தட்ட’ கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற குதிரை யானைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம் (தொல். புறத். 24) என்று கூறுவர். இப்பாட்டினும், குட்டுவனை உழவனாகவும், அவனுடைய போர்க்கள நிகழ்ச்சியை ஏர்க்களத்தின் செயலில் வைத்தும் உருவகம் செய்து கூறினமையின், இதனை ஏர்க்கள வுருவகம் என்றார்போலும், இப் பாட்டுப் போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துக் கூறுதலின், அரிக்குரல் தடாரி உருப்ப வொற்றிப் பாடி வந்திசின் பெரும என்றும், பாடி வந்ததன் கருத்து விளங்குதற்கு, வேழ முகவை நல்குமதி யென்றும், நீட்டியாது தருக வென்பார், தாழா வீகைத் தகை வெய்யோய் என்றும் கூறினர். ஆசிரியர் பரணர் பெயரால் பரணர் பள்ளி யென்றோர் ஊர் கோயமுத்தூர் மாவட்டத்துக் காங்கேயப் பகுதியில் உள்ளது. (A. R. No. 560 of 1908) இப்போது இது பரஞ்சேர்வளியென வழங்குகிறது. 370. சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி சோழன் இளஞ்சேட்சென்னி சோழநாட்டுக்கு வேந்தனானபின் வட வடுகர் அடிக்கடி அவனது தொண்டை நாட்டிற்குட் புகுந்து குறும்பு செய்தனர். அவர்களை அவ்வப்போது அவன் வெருட்டி யோட்டினா னாயினும் வடுகரது குறும்பு குறைந்தபாடில்லை. முடிவில் அவன் பெரும் படை யொன்று கொண்டு சென்று பாழி யென்னுமிடத்தே தங்கியிருந்த வடுகரைச் சவட்டி வென்றி யெய்தினான். பாழி நகர் நல்ல அரணும் காவலும் பொருந்தியிருந்தமையின் அதனை வடுகர்கைப்பற்றிக் கொண்டு அதனைத்தமக்கு இடமாகக் கொண்டிருந்தனர், சோழன் வடுகரை வென்று அவருடைய வலிய அரண் சூழ்ந்த பாழி நகரையும் அழித்துச் செரு மேம்பட்டான். அதனால் அவனைச் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி யென வழங்கினர். இடையன் சேந்தன் கொற்றனாரென்னும் சான்றோர், சென்னி, செருப்பாழி யெறிந்த திறத்தை, எழூஉத் திணிதோள் சோழன் பெருமகன் விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி, குடிக்கடனாகலிற் குறைவினை முடிமார், செம்புறழ் புரிசைப் பாழி நூறி, |