| நினைப்பின் - நின்னிடத்துப் போர் செய்ய வந்த இருவரையும் கருதின்; தொன்றுறை துப்பின் நின் பகைஞரும் அல்லர் - பழையதாய்த் தங்கப்பட்ட வலியையுடைய நின் பகைவேந்தராகிய சேர பாண்டியருமல்லர்; அமர் வெங் காட்சியொடு - போரின்கண் விரும்பிய காட்சியுடனே; மாறு எதிர்பு எழுந்தவர் - நின்னொடு பகையாய் வேறு பட்டெழுந்த அவ்விருவர்தாம்; நினையுங்காலை - நினையுங்காலத்து; நீயும் அவர்க்கு அனையையல்லை - நீயும் அவர்க்கு அத்தன்மையையாகிய பகைவனல்லை; அடு மான் தோன்றல் - பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ; நீ பரந்து படு நல்லிசை எய்தி - நீ பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி; உயர்ந்தோர் உலகமெய்தி - தேவருலகத்தின்கட்போய்; பின்னும் ஒழிந்த தாயம் - பின்பு நீ ஒழித்த அரசாட்சியுரிமை; அவர்க்கு உரித்தன்று - அவர்க்கு உரித்து; அதனால் - ஆதலால்; அன்னது ஆதலும் அறிவோய்- அப்பெற்றித்தா தலும் அறிவோய்; நன்றும் இன்னும் கேண்மதி - பெரிதும் இன்னமும் கேட்பாயாக; இசை வெய்யோய் - புகழை விரும்புவோய்; நின்ற துப்பொடு - நிலைபெற்ற வலியொடு; நிற்குறித்து எழுந்து எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் - நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின் புதல்வர் தோற்பின்; நின் பெருஞ்செல்வம் யார்க்கு எஞ்சுவை - நினது பெரிய செல்வத்தை அவர்க் கொழிய யார்க்குக் கொடுப்பை; அமர் வெஞ் செல்வ - போரை விரும்பிய செல்வ; நீ அவர்க்கு உலையின்- நீ அவர்க்குத் தோற்பின்; இகழுநர் உவப்ப - நின்னை யிகழும் பகைவர் உவப்ப; பழி எஞ்சுவை பழியை யுலகத்தே நிறுத்துவை; அதனால் - ஆகலான்; ஒழிகதில் நின் மறன் - ஒழிவதாக நின்றுடைய மறன்; வல்விரைந்து எழுமதி - கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக; நின் உள்ளம் வாழ்க - நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அழிந்தோர்க்கு ஏமமாகும் நின் தாள் நிழல் - அஞ்சினோர்க்கு அரணாகும் நினது அடிநிழல்; மயங்காது செய்தல் வேண்டமால் நன்று - மயங்காமற் செய்தல் வேண்டும் நல்வினையை; வானோர் அரும் பெறல் உலகத்து ஆன்றவர் - விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர்; விதும்புறு விருப்பொடு - விரைந்த விருப்பத்தோடு, விருந்து எதிர் கொளற்கு - விருந்தாக ஏற்றுக்கொள்ள; எ - று.
மற்று: அசை. தில்: விழைவின்கண் வந்தது. வானோருலகென்றது ஒட்டன்றி ஒருபெயராய் நின்றது. வேந்தே, நின்மறன் ஒழிக; ஆன்றவர் விருந்தெதிர் கொளற்கு நன்று செய்தல் வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்தெழுவாயக; நின்னுள்ளம் வாழ்வதாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. |