| முகில் விரும்பிய தலைகளாகிய கனிகளைப் பெய்ததாக; துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப - முழங்கிவரும் குருதி வெள்ளம் நிலத்தின்மேற் பரவிச் செல்ல; விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்து - விளைந்த செழுமையான கதிர்களாகிய கழுத்தை யறுத்துக் காலொன்றக் குவித்து; படு பிணப் பல்போர்பு அழிய வாங்கி - இறந்த பிணங்களாகிய பல போர்கள் அழியும்படி வளைத்து; களிறு எருதாக - யானைகளை எருதாகவும்; வாள் மடல் ஓச்சி - வாட்படையைப் பனைமடலாகவும் கொண்டு செலுத்தி; அதரி திரித்த ஆளுகு கடாவின் - புணைகட்டிச் சூழ் வரச்செய்த காலாட்கள் வீழ்ந்த கடாவிடுமிடத்து; அதன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி - அகன்ற கண்ணையுடைய தடாரிப்பறை யொலிக்க அறைந்து; வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி - வெவ்விய திறலையுடைய நின் பெரிய போர்க்களம் புகழால் விளக்கமுறுக எனப் பாராட்டி; இருப்பு முகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் - இரும்பினாற் செய்யப்பட்ட பூண் செறிக்கப்பெற்ற உயர்ந்த அழகிய மருப்பினையுடைய; வரை மருள் முகவைக்கு வந்தனென் - மலை போலும் களிறாகிய பரிசில் பொருட்டு வந்தேன்; பெரும - பெருமானே; வடிநவில் எஃகம் பாய்ந்தென - வடிக்கப்பட்ட கோடரி பாய்ந்து வெட்டிற்றாக; கிடந்த தொடியுடைத் தடக்கை ஓச்சி - துணிபட்டுக்கிடந்த தொடியணிந்த பெரிய கை யொன்றை எடுத்து மேலே யுயர்த்தி; வெருவார் இனத்து இடிவிராய வரிக்குடர் அடைச்சி - அஞ்சாத வீரர் கூட்டத்தின் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரிபொருந்திய குடரை ஒருங்கு சேர்த்து; பேய்மகள் அழுகுரல் அயர - பேய்மகள் தன் அழுகுரலை யெடுத்துப் பாடிக் கூத்தாட; கூழுகொடு செஞ்செவி யெருவை திரிதரும் - கழுகுகளும் சிவந்த செவியையுடைய பருந்துகளும் இருந்து வட்டமிட்டுத் திரியும்; அஞ்சுவது கிடக்கைய களம் கிழவோய் - கண்டார்க்கு அச்சம் பயக்கும் இடத்தையும் போர்க் களத்தைத் தனதாக்கிக் கொண்ட உரிமையுடையவனே; எ - று.
வள்ளியோரது வள்ளன்மை பற்றுக்கோடாகத் தன் இனத்தவர் உயிருய்கின்றன ரென்பான், வள்ளியோர்க் காணாது உய்திறனுள்ளி என்றான். நார், பனைமடலிற் பெறப்படும்நார் போழ், பனங்குருத்து. முழாஅரைப் போந்தையரவாய் மாமடல் நாரும் போழும் கிணையொடு சுருக்கி (புறம். 375) என்று பிறரும் கூறுதல் காண்க. நாரும் போழும் செய்துண் டென்றும் பாடவேறுபாடுண்டு. பசி மிகுதியால் உணவு தருவாரையே நோக்குதலின், ஒக்கற்கு ஆர்பதம் கண் என்றார்.துடியோசை போன்றதாயினும், கேட்டற்கு இன்னாதா யிருத்தலின் துடிமருடீங்குரல் எனப்பட்டது. மாரி கனி பெய்தென வென்றது இல்பொருளுவமை. வீழ்கனி, உண்ண விரும்பிய இனிய கனி. குரல், கழுத்துமாம். களிறுகளை நிரையாகப் பூட்டிப் பிணங்களை மிதித்துக்கொண்டுசுற்றி வரச்செய்வதால், |