| உடல்குழைந்து தலை வேறுபட்டு நீங்குதலின், அதரி திரித்த ஆளுகு கடாவின் என்றார். வரைமருள் முகவை யென்றதனால், களிற்றுப் பரிசில் என்பது பெற்றாம், வெருவார் - அஞ்சாத வீரர். கிடக்கைய; பெயரெச்சக் குறிப்பு. களத்தை வென்று தனதாக்கிக் கோடலின், களங் கிழவோய் என்றார். கிழவோய், பெரும, பறவைபோல, ஏத்தி, முகவைக்கும் வந்தனன் எனக் கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: நெல்லுழவர் நெல்லரிந்து தொகுத்த நெற்களத்துக்குச் சென்று பாடி நெல்பெற்று மகிழும் பொருநருட் சிலர் வேந்தர் போருடற்றி வெற்றி யெய்தும் போர்க்களத்துக்குச் சென்று பாடிக் களிறும், தேரும், மாவும், கலன்களும் பெறுவது பண்டையோர் மரபு. அவ்வாறு ஊன்பொதி பசுங்குடையார் செருப்பாழி ஏனை இர வலர்க்கும் பகுத்தளித்து உண்பது அவர்களுக்கு இயல்பு. அதனால் வறுமை எய்தி வருந்துவது அவர்கள் வாழ்வில் அடிக்கடி யுண்டாகும் நிகழ்ச்சியாகும். வறுமை மிக்கவழி ஏர்க்களமோ, போர்க்களமோ நாடிச் செல்வரென்பது விளங்கும்.போர்க்களம் பாடும் பொருநன் வறுமையுற்று வருந்திய வருத்தத்தைத் தொடக்கத்திலே குறிப்பிப்பார், உய்திறன் உள்ளி வள்ளியோர்க் காணாது ஊன் பெறாது பசிதினத் திரங்கிய ஒக்கல் பொருட்டு, மாதிரம் துழைஇ, கானம் பிற்படப் பழுமரம் உள்ளிய பறவைபோல வந்தேன் என்றான் என்றார். தான் பாடும் ஏர்க்களத்துக்கும், போர்க்களத்துக்கும், ஒப்புமை காட்டி ஏர்க்களம் பாடினோர்க்கு வழங்குவது போலப் போர்க்களம் பாடின எனக்கும் வழங்குதல் வேண்டும் என்பான், வெந்திறல் வியன்களம் பொலிக என்றேத்தி வரைமருள் முகவைக்கு வந்தனென் எனற்ான். ஒண்படை மாரி வீழ்கனி பெய்தன என்பது முதல் அதரி திரித்த ஆளுகு கடாவின் என்பது வரை ஏர்க்களத்தோடு போர்க்களத்தை உருவகம் செய்தவாறு. சென்னியின் போர்த்திறம் புகன்று கூறுவார், பேய்மகளும் கழுகும், எருவையும் திரியும் போர்க்களம் கண்டார்க்கு அச்சம் உண்டாகும் வகையில், போரிற்பட்டோருடைய பிணக் குவையால் காட்சி வழங்கச் செய்து அக் களத்தில் வெற்றிக்குரியோன் சென்னியேயாய் மேம்பட்டான் என்பது பற்றிக் களங் கிழவோய் என்று குறித்துள்ளார். 371. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச், செருவென்ற நெடுஞ்செழியன் ஒருகால் தன்னை யெதிர்த்த பகைவரை வென்று களங்கொண்டு மேன்மை யுற்றான். பகைவீரர் பலர் பட்டு வீழ்ந்தனர். அவருடைய குதிரையும் களிறும் பலவாய்ப் பட்டு வீழ்ந்தன. சிதைந்து வீழ்ந்த பிணங்களைப் பேய்மகளிருண்டு களித்து நெடுஞ்செழியனை வாழ்த்திக் கூத்தாடினர். அக் காலத்தே போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் அவனைப்பாடிப் பரிசில் பெறும் கருத்துடன் சென்று காணும் வகையில் ஆசிரியர் கல்லாடனார் இப் பாட்டைப் பாடியுள்ளார். கல்லாடனார் தொண்டை நாட்டினரென்பது நினைவுகூரத் தக்கது. (செந். செல்வி சிலம்பு. 23 பக்கம்: 113.) இதன்கட் கூறப்படும் பொருநன் தன்னைப் புரக்கும் தலைவர்கள் வேறேயில்லாமை யால் வறுமையால் உணவின்றி வாடி ஒரு மரத்தடியில் தங்குகின்றான். பின்பு, தன் கரவடியின் ஒரு தலையில் பறையையும் மற்றையதில் இசைக் கருவிகளை வைத்துக் கட்டிய பையையும் |