| சென்னியிலுள்ள; பாறுமயிர் அவிய - சிதறிக்கிடக்கும் தலைமயிர் அடங்கிப் படியுமாறு; தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர் - தண்ணிய பனி துளிக்கும் நன்கு புலராத விடியற் காலத்தில்; மன்றப் பலவின் மாலரைப் பொருந்தி - மன்றத்தில் நிற்கும் பலாமரத்தின் பெரிய அடியில் இருந்து; என் தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி - என்னுடைய தெளிந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறைநன்கு ஒலிக்குமாறு கொட்டி; இருங்கலை ஓர்ப்ப இசைஇ - பெரிய கலை மானினம் செவிசாய்த்துக் கேட்குமாறு இசைத்து; காண்வர - அழகுண்டாக; கருங்கோற் குறிஞ்சியடுக்கம் பாட - பெரிய தண்டினையுடைய குறிஞ்சிமரஞ் செறிந்த மலைப்பக்கத்தைப் பாடவே; புலிப்பற்றாலிப் புன்றலைச் சிறாஅர் - புலிப்பல் கோத்த கழுத்தணி யணிந்த புல்லிய தலையையுடைய குறச் சிறுவர்களைப் பயந்து; மான்கண் மகளிர்க்கு ஆன்றோர் - மான் போலும் கண்ணையுடைய மகளிர்க்கமைந்த கணவன்மார்; அகன்று றைச் சிலைப்பாற்பட்ட முளவுமான் கொழுங்குறை - அகன்ற நீர்த் துறைக்கண் தம் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம்பன்றியின் கொழுவிய வுனும்; விடர்முகையடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம் - மலைப்பிளவுகளையும் குகைகளையுமுடைய மலைப்பக்கத்தே கிளை தழைத்து நிற்கும் சந்தனக்கட்டையும்; புகர்முக வேழத்து மருப்பொடும் மூன்றும் - புள்ளி பொருந்திய வலிய புலியினுடைய வரியமைந்த தோலின்மேற் குவித்து; விருந்து இறை நல்கும் நாடன் - விருந்தினர்க்குக் கொடுக்கும் நாட்டையுடையனாகிய; எங்கோன் - எங்கள் தலைவனான்; கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல - கழலவிடப்பட்ட தொடியணிந்த ஆஅய் அண்டிரனைப்போல; ஞாயிறு - ஞாயிறே; வண்மையும் உடையையோ - வள்ளன்மையு முடையையோ; விசும்பின் கொன் விளங்குதி - வானத்தின்கண் வறிதே ஒளிதிகழ்கின்றா யாகலின்; எ- று.
செல்வர் தந்த பொற்றாமரை கிடந்து விளங்குந்தலையைப் பொல மிலங்கு சென்னி யென்றார். நன்கு புலராப் போதிற் பெய்யும் பனி பாறிய தலையிரைப் படிவிக்குஞ் செயலை; பனி பழுனி பல்யாமத்துப் பாறு தலைமயிர் நனைய (புறம். 377) என்று பிறரும் கூறுதல் காண்க. உறக்கதத்திற் சிதறிப் பரந்த தலைமயிர், ஈண்டு பாறுமயிர் எனப்பட்டது. கருங்கோல், பருத்தகொம்பு, சிறாரையுடைய மகளிரும் அவர்க்கமைந்த கணவன்மாரும் விருந்திறை நல்கும் நான் என இயைக்க. சிறுவர்க்குப் புலிப்பற் கோத்த தாலி யணிதலை, புலிப் பற்றாலிப்புதல்வர் (குறுந். 16) என்பதனாலுமறியலாம். அகன்றுறை. அகன்ற நீர்த்துறை. நீர்த்துறைக்கண்ணிருந்தே முள்ளம் பன்றியை வேட்டஞ் செய்தல் வேட்டுவர்மரபு. முளவுமான், முள்ளையுடைய மாவாகிய பன்றி, ஆய் அண்டிரன் வள்ளன்மையால் |