பக்கம் எண் :

37

     கொண்டு அறங்கூரும் தவம் செய்தலாகும். இத் தவம் செய்து உயிர்
துறப்போர் வானோர் உலகம் புகுந்து இன்புறுவர்; இதுவே பெருந்தவமாயின்
வானுலகிற்கு மேலாகிய வீட்டின்கண் சென்று பிறவாநிலையினை யெய்துவர்.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் தொடங்கியவுடன், அதுபற்றிப் பலரும்
பலபடப் பேசலுற்றனர். வடக்கிருத்தலாகிய நல்வினையை நன்றெனக்
கருதாதவரும் என்றும் பிறவா நிலையென்பது கிடையாதென்பவரும்
இருந்தனர். இதனையறிந்த அறிவுமிக்கவனான கோப்பெருஞ்சோழன்
“இத்தவத்தைச் செய்வதற்குரிய வாய்ப்புண்டானபோது தெளிந்த
அறிவில்லாதவர்களே, இதனைச் செய்யலாமோ செய்யாதொழியலாமோ என
ஐயுற்று அலமருவர். யானை வேட்டைக்குச் செல்வோன் தவறாது வேட்டம்
வாய்க்கப் பெறுவதும், சிறுபறவைகளை வேட்டையாட விழைந்து
செல்வோன், அவற்றைப் பெறாது தப்பி வெறுங்கையுடனே திரும்புவதும்
கண்கூடு. இதனால் உயர்ந்தது உள்ளுவோர்வெற்றியும், சிறியது கருதுவோர்
தோல்வியும் பெறுவரென்பது துணிவாம் அதனால், உயர்ந்ததாகிய
இத்தவத்தை மேற்கொண்டோர், தொய்யாவுலகாகிய துறக்கவுலக இன்பத்தைப்
பெறுவர்; தவத்தின் பெருமைநோக்க அவ்வின்பம் சிறிதாயின், தொய்யாவுலக
நுகர்ச்சி வேண்டாது பேரின்ப வீட்டைப்பெறுவர். அவ்வீடெய்தினோர் மீளப்
பிறவார். இனி மறுபிறப்பு இல்லையென்று கருதுவோர்க்கு இது தெரிந்த
உண்மையாகும்; என்னெனில், இத்தவம் செய்வோர், மாறிப் பிறவாராயினும்,
தம் புகழை நிறுவிப் புகழுடம்பு கொண்டு நிலைபெறுவர்” என எடுத்தோதும்
கருத்தால் இப் பாட்டைப் பாடினான். சூழ இருந்தோர் இது கேட்டு மனந்
தெளிவடைந்தனர்.

 செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
5குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
 அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
10மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
 மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தவறத் தலையே.

 திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி. அவன்
வடக்கிருந்தான் சொற்றது.

    உரை:
நல்வினை செய்குவங்கொல்லோ என-அறவினையைச்
செய்வேமோ அல்லேமோ என்று கருதி; ஐயம் அறாஅர்-ஐயப்பாடு
நீங்கார்;