பக்கம் எண் :

38

     

கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்து அழுக்குச் செறிந்த காட்சி
நீங்காத உள்ளத்தினையுடைய; துணிவில்லோர் - தெளிவில்லாதோர்;
யானை வேட்டுவன் யானையும் பெறும் - யானைவேட்டைக்குப்
போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; குறும்பூழ்
வேட்டுவன் வறுங்கையும் வரும் - குறும்பூழ் வேட்டைக்குப்
போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் -;
உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு - உயர்ந்த
விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்கு; செய்வினை மருங்கின் - தாம்
செய்யப்பட்ட நல்வினைக் கூற்றிலே; எய்தல் உண்டெனில் - அதனை
யனுபவித்த லுண்டாமாயின்; தொய்யாவுலகத்து நுகர்ச்சியும் கூடும் -
அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்ப
மனுபவித்தலும் கூடும்; தொய்யாவுலகத்து நுகர்ச்சி இல்லெனின் -
அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சி யில்லையாயின்; மாறிப் பிறப்பின்
இன்மையும் கூடும் - மாறிப் பிறவாராயினும் - மாறிப் பிறவாரென்று
சொல்லுவா ருளராயின்; இமயத்துக் கோடு உயர்ந்தன்ன-
இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற; தம் இசை நட்டு - தமது
புகழை நிலைபெறுத்தி; தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலை -
வசையில்லாத வுடம்போடு கூடி நின்று இறத்தல் மிகத் தலையாயது,
அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது; எ - று.


    உயர்ந்தி சினோர்க்கென்னும் நான்காவதன்றியும் உயர்ந்திசினோர்
செய்வினை மருங்கின் எய்தலுண்டெனின், இவர்க்கு நுகர்ச்சியுங்
கூடுமென்றுரைப்பினுமமையும். பிறவாராயினும் என்னும் உம்மை அசை
நிலை; உம்மையின்றி யோதுவாருமுளர்.

    காட்சியொடு நீங்கா நெஞ்சத்து என்பதூஉம் பாடம்.

    விளக்கம்: அல்லேமோ என்பது எஞ்சிநின்றது. கசடு, அழுக்கு.
தெளிந்த நீரைத் துணிநீரென்றாற்போலத் தெளிவில்லதாரைத் “துணிவில்லா”
ரென்றார்; “துணிநீர் மெல்லவல்” (மதுரை. 283) என்றும், “துணிநீரருவி”
(ஐங். 223) என்று சான்றோர் வழங்குதல் காண்க. வேட்டம், விருப்பம்.
உயர்ந்தது விரும்பி முயல்வார் உயர்ந்து சிறப்பரென்பதுபற்றி, “உயர்ந்த
வேட்டத் துயர்ச்திசி னோர்க்கு” என்றார். நல்வினைக் கூற்றின்பயன்
இன்பமாதலின், அவ்வின்பத்தை, “அதனை” யென்று குறித்தார். தொய்தல்,
வினைக்கண் ஈடுபடுதல். தொழிலாகிய வினைக்குரியது இவ்வுலகமென்றும்,
வினையீடுபாடின்றி இன்ப நுகர்ச்சி யொன்றிற்கே யுரியது உம்பருலகென்றும்
சான்றோர்  கூறுவர்.இது  பற்றியே  வடநூலார்   இம்பருலகைக்
கன்மபூமியென்றும், உம்பருலகைப் போகபூமியென்றும் வழங்குவர். மாறிப்
பிறப்பு- உம்பருலக நுகர்ச்சி கழிந்தவழி மண்ணுலகில் மீளப்பிறக்கும் பிறப்பு.
பிறப்பு: தொழிற்பெயர். பிறப்பின் இன்மை- பிறத்தற்கண் பிறத்தலுக்குரிய
நுகர்ச்சியேது இல்லாமையால் பிறப்பில்லையாதல்; அஃதாவது வீடுபேறு
உண்டாம். தொய்யாவுலகத்தில் நுகர்ச்சியில்லையாயின், அதற்கப்பாற்
பட்டதாகிய வீடுபேறுண்டாம்;