பக்கம் எண் :

39

     

அதனைப் பண்டையோர் ‘வானோர்க் குயர்ந்த வுலகம், என்றும்’ ‘ஈண்டு
வாராநெறி’ யென்றும் கூறுப.“மாறிப் பிறவாராயின்”என்பதனை “இமயத்துக்
கோடுயர்ந்தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல்” என்பது
தொடர்ந்துசிறப்பிப்பதுகொண்டு,  “மாறிப்பிறவா ரென்று
சொல்லுவாருளராயின்...தலையாயது” என்று உரைத்தார். “அதனால்
எவ்வாற்றானும் நல்வினையே செய்தல் அழகிது” என்றது குறிப்பெச்சம்.
ஆகவே, நல்வினை செய்தார் இம்மையிற் புகழும் மறுமையில் இன்பமும்
வீடுபேறும் பெறுவர் என்பதாம்.

---

215. கோப்பெருஞ் சோழன்

     கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கையில் சான்றோர் பலர் அவனைச்
சூழ இருந்தனர். வேறு பலரும் அவ்வப்போது வந்து பார்த்த
வண்ணமிருந்தனர். இவ்வாறு நண்பர்களாகிய சான்றோர் பலரும்
இருந்தாராயினும், சோழனது எண்ணம் பிசிராந்தையார்பால் ஒன்றியிருந்தது.
அவ்வப்போது அவன் அவரை நினைந்து சான்றோர்பால் உரையாடினான்.
“சோழன் வடக்கிருக்கும் செய்தி ஒருகால் பிசிராந்தையார்க்குத் தெரியாது
போலும்; பிசிரென்னும் ஊர் பாண்டிநாட்டில் நெடுந்தொலைவில் உளது;
அவர்க்கு இச்செய்தி சென்று சேர்தலும் எளிதன்று. செய்தி தெரிந்தாலும்
அவர் தவறாது வருவார் என்பதும் ஐயப்படற்குரியது. சோழன் அவரை
நினைந்து காட்சியார்வத்தால் கருத்தழிதல் நன்றன்று” என்று சான்றோர்
தம்முட் பேசிக்கொண்டனர். இது கோப்பெருஞ் சோழன் செவிக்கெட்டியது.
ஆந்தையாருடைய ஆன்றவிந் தடங்கிய அருமையும் அன்பும்
அவர்க்குரைப்பானாய், “ஆந்தையார் பாண்டி நாட்டுப் பிசிர் என்னும்
ஊரினரே; ஆயினும், அவர் என் உயிரை விரும்பும் உண்மை நண்பர்.
செல்வக்காலத்தே அவர் போந்து என்னைக் கண்டதிலர். காணாராயினும்
அல்லற்காலமாகிய இப்போது போந்து என்னைக் காணதொழியார்;
காண்டற்கு விரைய வருவார்” என்ற கருத்தமைய இப்பாட்டைப் பாடினான்.

 கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ
ஆய்மக ளட்ட வம்புளி மிதவை
5அவரை கொய்யுந ரார மாந்தும்
 தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னெ்னபவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.

     திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. போப்பெருஞ் சோழன்
பிசிராந்தையார் வாரார் என்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று
சொல்லயிது.