| படப்பை - மலைசார்ந்த தோட்டங்களை யுடைய; நன்னாட்டுப் பொருந - நல்ல நாட்டையுடைய பொருநனே; பொய்யா ஈசைக் கழல்தொடி ஆஅய் - பொய்யாத வள்ளன்மையும் கழலவிடப் பட்ட தொடியுமுடைய ஆயே; கிணைப்ப யாவரும் இன்மையின் - கிணையைக்கொட்டிப் பரவுதற்கேற்ப எம்மைப் புரப்போர் பிறர் இல்லாமையால்; தவாது - நின்றாங்கு நின்று கெடாமல், பெரு மழை கடல் பரந்தாங்கு - பெரிய மழை முகில்கள் நீர் கோடற் பொருட்டுக் கடற்குச் சென்றாற்போல; யானும் ஒருநின் உள்ளி வந்தனென் - யானும் ஒப்பற்ற நின்னை நினைந்து வருவேனாயினேன்; அதனால், புலவர் புல்கிலாகி - புலவர்கட்குப் புகலிடமாய்; ஒன்று - ஒன்றாக; நின்னின்று வறுவிதாகி வுலகத்து - நீ இல்லாமையால் வறிதாகும் இவ் வுலகின்கண்; புலவர் நிலவன் மார் - புரப்பாரை நோக்கி வாழும் புலவர் இலராயொழிவாராக; துன்னிப் பெரிய வோதினும் சிறிய உணரா - நெருங்கிச் சென்று பல சொற்களால் எடுத்துரைத்தாலும் சிறிதளவுதானும் உணரும் உணர்ச்சியில்லாத; பீடின்று பெருகிய திருவின் பாடில் மன்னரை- சிறப்பின்றி மிக்குள்ள செல்வத்தையுடைய பெருமையில்லாத வேந்தர்களை; எமர் பாடன்மார் - எம் மினத்தவர் பாடாதொழிவாராக; எ - று.
காற்றால் அலைப்புண்டு புலர்ந்து நீங்கிப் பறந்துவரும் கதிர்கள் வீழ்ந்துகலங்கிய சேற்றுநீரிற் படிந்து கிடக்கும் நீர்நிலை, அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி யெனப்பட்டது ஒப்புப்பொருட்டாய இன்னுருபு விரித்துக் கொள்க. வட்டமாயிருத்தல்பற்றி நீர்நிலையைச் சூழியென்றார். இச் சூழி போலவே பொதியிலிடமும் தரைவெடித்துக் குப்பையும் கூளமும் நிறைந்து குழிந்து பொலிவின்றிக் காணப்படுதலின் சூழியை யுவமம் கூறினார். தரை வெடித்துக் குழிதலால் பொதியிலின் கட்டும் கோப்பும் தளர்ந்தமையின் நிலைதளர்வு தொலைந்த என்றும் தளர்ந்த விடந்தோறும் பல கால்களை நிறுத்தி வீழாமற் காக்கப்படுமாறு தோன்ற ஒல்குநிலைப்பல்காற் பொதியில் என்றும், உழவர் மனையில் இரந்து நின்று அவர் நல்கும் உணவையிரந்துண்பது வறுமையைப் போக்காது துயர் மிகுத்தலின் ஏரின் வாழ்நர் குடி முறைபகாஅ வூழிரந் துண்ணும் உயவர் வாழ்க்கை யென்றும், போரு ழந்து மேம்பட்ட சான்றோரையே நாடிச் செல்லுமாறு தோன்றப் புரவெதிர்ந்து கொள்ளும் சான்றோர் யாரென வந்திசின் என்றும் கூறினார். கிணையென்னும் பெயரடியாகப் பிறந்த வினை. தவாது பரந்தாங்கு என இயையும் கண்டென ஒரு சொல் வருவிக்கப் பட்டது. மழை கடற்பரந்தாங் கென்றதனால் ஆஅய் அண்டிரன் கடல் போலும் செல்வமுடைய னென்பது பெற்றாம். புலவரது புலமை உணவு குறித்து வருந்துமாயின் சீரிய இலக்கியங்கள் பிறவாமலும், மக்கள் அறிவு அவற்றின் வாயிலாக நாட்டிற்குப் பயன்படாமலும் கெடுமாகலின், வறுவிதாகிய வுலகத்து, நிலவன் மாரோ புலவர என்றான். இரவலரென்பது பாடமாயின் இரவலர் |