| சிந்தியேன்; சிறுகிணைக்குரல்; தோன்றல் செல்லாது எனக்கூட்டி வினைமுடிபு செய்க. அவ்விரவினான் என்புழிச் சுட்டு அன்றென நின்றது; அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே (தொல். சொல். சேனா. 66) என்புழிப்போல. அன்றே என்பதனை அசைநிலை யெனினும், அப்பொழுதே யெனினு மமையும்.
விளக்கம்: இயன்மொழியாவது, இன்னோ ரின்னவை கொடுத்தால் நீயும், அன்னார்போல வவையெமக் கீகென, என்னோரு மறிய வெடுத்துரைத்தன்று (பு.வெ. மா. 9,6) எனவரும். இயன்மொழி வாழ்த்தாவது, வென்றியும் குணனும் அடுத்துப் பரந்தேத்துவது (தொல். புறத். 29) என இளம்பூரணம் கூறி, இதனை இயன்மொழி எனவும், வாழ்த்தெனவும், இயன்மொழி யாவது, வென்றியாவது, குணமாவது, இரண்டுமாவது எடுத்தோதப் பரவுதல் எனக் கொள்ளலாம். இவ்வகையில் ஈண்டு நன்னாகனார் நல்லியக்கோடனது கொடை நலத்தையே அடுத்துப் பரந்தேத்திமொழிதல்பற்றி, இப்பாட்டுஇயன் மொழி யெனப்பட்டதெனக் கோடல்வேண்டும். இப்பாட்டின்கண் கூற்று நிகழ்த்தும் பொருநன், கோடனது நன்மனைக் கூட்டு முதல் நின்றானாக, நைந்து கரைபறைந்த அவனது உடையை நோக்கி, புறக்கணியாது கொடைப்பண்புடையனாதலால் இவன் விருந்தினன் அளியன் என இன்மொழிநல்கித் தன் பெருந்தகைமையைப் புலப்படுத்தினான் நல்லியக்கோடன். இரவுப்போது ஈத்தற்குச் சிறந்த தன்றாயினும், அது நோக்கிற்றிலன் என்றும், இரப்பவர் என்பெறினும் கொள்வர் என்பதுபற்றிச் சிறிது நல்காது பெரிது நல்கினன்; அதனால், யான் என்றும் பிறரைச் சென்று இரக்கும் வறுமை எய்துதல் இல்லேனாயினேன் என்றும் கூறுவான், இரவினானே ஈத்தோன் எந்தை என்றும், கூறினான். நல்லியக்கோடன் வழங்கிய கொடையின் பெருமையைப் புலப்படுக்கலுற்றவன், வள்ளியோர் கடைத்தலை நாடியோடும் என்னுள்ளம் அச்செலவை மீளச் சிறிதும் கருதா வகையில் அடைந்த தென்றற்கு, ஒரு நாள்...சிறுகிணைக் குரலே என்றான். எனவே, இத்துணையும் கொடைநலமே புகழ்ந்தோதியவாறு காண்க. நல்லியக்கோடன் என்பது நல்லியனாகிய கோடன் என விரியும். கோடன் என்பது இயற்பெயர்; குயக்கோடன் (த. நா. சரிதை. 10) எனப் பிற்காலத்தும் இப்பெயர் வழக்கிலிருக்கிறது. மேல் வெம்பா நாட்டுக் கோடனூர் (A. R. No.20 of 1932-33) எனப் பாண்டி நாட்டிலும், கோடன்பாக்கம் எனத் தொண்டை நாட்டிலும் ஊர்கள் பல இருப்பது நோக்கத் தக்கது. இதனைச் சிலர் கோஷனூர் என்பதன் திரிபாகக் கூறுவது பொருந்தாமை காண்க. 377. சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்காலச் சோழ வேந்தருள் காலத்தாற் பிற்பட்டவன். இவனை ஒருகால் உலோச்சனாரென்னும் நல்லிசைச் சான்றோர் காணச்சென்றார். இவர் பெயர் உவோச்சனார் என்றும் காணப்படுகிறது. அக்காலத்தே யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, வாட்படை முதலிய படைத்தலைவர்கள் |