பக்கம் எண் :

379

     

அவற்றிற் கரணாவன புறநிலை வாழ்த்துக்கள் என்ற கருத்தால் அது,
பொருள் எனப்பட்டதென வறிக. உயர் பொருளே உவமமாவன வாகலின்,
“பியர்க்குவமந் தானல்லது தனக்குவமம் பிறரில்லென” என்றார். “உயர்ந்ததன்
மேற்றேயுள்ளுங்காலை” (தொல். உவம. 3) என்ப. பிறரும், “பிறர்க்கு நீ
வாயினல்லது நினக்குப்பிறருவம மாகா வொருபெருவேந்தே”(பதிற். 3) என்பது
காண்க. உவமத்திற்கு ரிய உயர்ந்தோர்களை யெண்ணி ஒருவரையும்
காணாமையால் அறிவு மழுங்கினமையின், “மதிமழுகி” என்றான். புரவலை;
புரத்தலையுடையை; அஃதாவது பாதுகாக்கப்படுவை யென்பதாம். “கனவிற்
கண்டாங்கு நனவின் நல்கியோன்” என்றது பெருநற்கிள்ளி தந்த வளத்தின்
பெருமையும் அருமையும் சுட்டி நின்றது. யானையரும் மாவினரும் தேரினரும்
வன்கணினருமாகிய வேந்தரென்றுமாம். அச்சத்தால்ல ஈண்டாது அன்பால்
ஈண்டுவதே   உயர்ந்த    அரசியற்கு   மாண்பாதலின்.   அதுதோன்ற,
“ஆர்வமொடீண்டி” யென்றார். அடல் வெற்றியுமாம். அகற்ற, குறுகி,
பிறர்இல்லென, நினைந்து, மழுகி, நின்ற எற்காணூஉ, என்ன, நிற்ப,
தோன்றல், நல்கியோன், மொழிவோர் மொழிவோர்; மொழிவோர்;
மொழிவோர்; யானையர், மாவினர், குழுவினர், வன்கணினர், வாழ்நர்,
ஈண்டுக்கொண்ட தானையையுடைய குரிசில் மன்னிய எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.

     விளக்கம்: வாழ்த்தியலாவது “அலங்குகதிர்” (புறம். 375) என்ற
பாட்டுரையின் விளக்கப் பகுதியிற் கூறினாம். இப்பாட்டின்கண் ஆசிரியர்
உலோச்சானார் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துச் சோழன்
இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் கொடைப் பண்பை எடுத்தோதி
வாழ்த்துகின்றார். பெயர் பெற்றோர் என்றது, புலவர் புகழ்ந்து வாழ்த்தும்
வாழ்த்துக்களைப் பொருளாகப் பெற்ற வேந்தர்களை யென அறிக.
கிள்ளியைப் பாடிச்சென்ற கிணைப்பொருநன், அவனைக் கண்டபோது,
அவனைச் சூழ்ந்திருந்த சான்றோர் புலவர்பாடும் புகழ்பெற்ற வேந்தருள்
“இவனுக்குவமம் இவனே யன்றிப் பிறர் இல்லை” யென்று கூறினர்;
அதுகேட்டுக் கிணைவன் மதிமருண்டு நிற்க, பெருநற்கிள்ளி அவனை
யடைந்து “நீயும் எம்மாற் புரக்கப்படுந் தகுதியுடையை” என்று சொல்லி
மணியும் பொன்னும் முத்தும் கள்ளும் கனவிற் கண்டாங்கு நனவின்
நல்கினான்; அவன் நெடிது மன்னுக என்று கிணைவன் வாழ்த்தினான்.
கிள்ளி இராயசூயம் வேட்ட வேந்தனாகலின், அவனைத் தொடக்கத்தில்,
“அவியுணவினோர் புறங்காப்ப, அற நெஞ்சத்தோன் தன்னாள்வாழ்க”
என்று வாழ்த்திச்சென்றான். அவனை வேந்தன் வரவேற்றலும், ஆங்கிருந்த
சான்றோர் அவன் மதிமருளத்தக்க வகையில், “வாழ்க எனப்பெயர்
பெற்றோர்...பிறர் இல்” என்று மொழிந்தனர். கிள்ளியைக் காண
விழைந்தகாலத்தில் கனவின் கண் அவன் மிகு பொருள் வழங்குவதாகக்
கனாக்கண்டு நனவில் அவனை யடைந்தபோது அவன் கனவின் கண்டது
போல வழங்கினான் என்பான், “கனவிற்கண்டாங்கு வருந்தாது நிற்ப,
நனவின். நல்கியோன் நசைசால்தோன்றல்” என்றான். கொடைக்கேற்ப
மறத்திலும் குறைபாடிலனென்றற்குத் தானையை விதந்தோதினான்.